தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வயல்களில் மழைநீர்  தேங்கி உள்ளது. வடிகால்கள் முறையாக இல்லாத காரணத்தால் மழைநீர் தொடர்ந்து தேங்கியதால், அறுவடைக்கு சில நாட்களே இருந்த நெற்கதிர்கள் கீழே சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் நெல்மணிகள் தண்ணீரில் நனைந்து சேதமாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் குறிப்பாக திட்டை, அன்னப்பன்பேட்டை, மெலட்டூர், சாலியமங்கலம், காசவளநாடுபுதூர், கண்டிதம்பட்டு, ஒரத்தநாடு, மதுக்கூர், பட்டுக்கோட்டை, செ.புதூர், ஆடுதுறை, திருமங்கலக்குடி, பந்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நெற்கதிர்கள் மழையால் கீழே விழுந்து சேதமடைந்துள்ளது. அடுத்த சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் இந்த நெற்கதிர்கள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.




அதே போல் திருவோணம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட சுமார் 100 ஏக்கர் நிலக்கடலை, உளுந்து வயலில் மழைநீர் தேங்கியதால் கடலை, உளுந்து  செடிகள் அழுகத் தொடங்கியுள்ளது.நேற்று முன்தினம் தொடர்ந்து மழை பெய்ததால், அதிராம்பட்டினம் காவல் நிலையத்தை மழைநீர் சூழ்ந்தது.இதனால் போலீஸார் அவதிக்குள்ளாகினர். இதற்கிடையில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி ஈச்சன்விடுதியில் 21 செ.மீ மழை பதிவானது. மேலும், பட்டுக்கோட்டை 18 செ.மீ, அதிராம்பட்டினம் 15 செ.மீ, மதுக்கூர் 10 செ.மீ, தஞ்சாவூர் 8.5 செ.மீ,  அணைக்கரை 7.8 செ.மீ,  வெட்டிக்காடு 7.6 செமீ, அய்யம்பேட்டை 6.2 செ.மீ, மஞ்சளாறு 5.5 செ.மீ, குருங்குளம் 4.7 செ.மீ, திருவையாறு 4.6 செ.மீ, பாபநாசம் 4.1 செ.மீ, ஒரத்தநாடு 4.0 செ.மீ, திருக்காட்டுப்பள்ளி 4.0 செ.மீ, பூதலூர் 4.0 செ.மீ,  திருவிடைமருதூர் 3.8 செ.மீ, கும்பகோணம் 3.5 செ.மீ, கல்லணை 2.5 செ.மீ, வல்லம் 2.0 செ.மீ  மழை பதிவாகியுள்ளது.




இது குறித்து விவசாயி சீனிவாசன் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவ மழை பெய்த போது,வாய்க்கால்களை துார் வாராததால் நடவு செய்த வயல்களில் மழை நீர் தேங்கி அழுகும் நிலை ஏற்பட்டது.  பின்னர் தமிழக அரசு, கடமைக்காக ஒரு சில இடத்தில் பார்வையிட்டு சென்றனர். விவசாயிகள் மீண்டும் பல்வேறு உரங்களை தெளித்து நாற்றுக்களை காப்பாற்றினர். ஆனால் தமிழக அரசு இடு பொருள், உரங்களை தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்று அறிவித்தது. ஆனால் இடு பொருளும் வரவில்லை. உரங்களும் அதிக விலைக்கு கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்டது.  கடந்த மழை காலத்தில், விவசாயிகள் எச்சரித்தும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாததால், தற்போது பெய்த மழையால் வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளது. எனவே, தமிழக அரசு சிறப்பு அதிகாரிகளை நியமித்து, பாதிக்கப்பட்ட வயல்களில் மழை நீர் தேங்குவதற்கான காரணத்தை கண்டுபிடித்து, தவறு இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.