வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் நிலையில், தற்போதுள்ள நெல் ரகங்கள் அனைத்தும் நீரில் முழ்கி அழுகி வரும் நிலையில், பாரம்பரிய நெல் ரகங்கள் எந்தவித பாதிப்பையும் சந்திக்காமல் காப்பாற்றப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இளம் நெற்பயிர்களின் வேர்கள் அழுகத் தொடங்கியுள்ளதால் விவசாயிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால், மிகவும் கவலை அடைந்துள்ளனர். மழை நீர் வடிந்த இடங்களில் விவசாயிகள் யூரியா மற்றும் ரசாயண ரங்களை தெளித்து பயிரை காப்பாற்றும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், எத்தகைய மழையையம் சமாளிக்கும் வகையில், இதையெல்லாம் தாண்டி பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த மழை நீர் வயல்களில் தேங்கியிருந்தாலும் எந்தவித பாதிப்பையும் சந்திக்காமல் நெற்பயிர்கள் கிடுகிடுவென வளர்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி வீ.முருகன் என்பவர், கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். பாரம்பரிய நெல் ரகங்களான கருங்குருவை, மாப்பிள்ளைசம்பா, தூயமல்லி, மடுமுழுங்கி ஆகிய நெல் ரகங்களையும், கத்தரி, கொத்தரை, அகத்தி, புதினா, பொன்னாங்கன்னி கீரை, தண்டு கீரை, புளிச்சக்கீரை, மஞ்சள், வாழை என 20 வகையான பல்வேறு தோட்டப்பயிர்களையும் மூன்று ஏக்கரில் இயற்கை உரங்களை கொண்டு சாகுபடி செய்து வருகிறார். தற்போது பெய்து வரும் மழையில் பாரம்பரிய நெல் ரகங்கள் நடப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியிருந்தாலும் நெற்பயிர்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பச்சை பசேல் என, தெளிவுடன் நன்றாக வளர்ந்துள்ளது. இந்த மழையினால் நெற்பயிர்களின் வேர்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் உள்ளது.
இதுகுறித்து இயற்கை விவசாயி வீ.முருகன் கூறுகையில்,
ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலத்தில் மழைநீர் வயல்களில் தேங்குவதும், நெற்பயிர்கள் கீழே சாய்ந்து சேதமடைவதும், விவசாயிகள் பாதிக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது. இது போன்ற இயற்கை இடர்பாடுகளால், விவசாயிகள் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. வருடந்தோறும் நடைபெறும் பாதிப்பிலிருந்து, நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ன நோக்கத்தில் பழமையான நெல் ரகங்களை சாகுபடி செய்ய முடிவு செய்தேன், மேலும், விவசாயிகள், தற்போது அதிக மகசூல் பெற வேண்டும் என்பதால், குறுகிய காலமான 90 நாட்களில் விளையக்கூடிய புதிய புதிய நெல் ரகங்களை பயிரிட்டு, அதற்கு ரசாயன உரங்களை இடுவதால் நெற்பயிர்கள் தெம்பு இல்லாமல் உள்ளது.
மாப்பிள்ளைசம்பா, துாயமல்லி விதைகள் கந்தர்வகோட்டை அருங்குலநாதர் என்பவரிடமும், மடுமுழுங்கி, கருங்குறுவை விதைகள் கண்ணதங்குடி கீழையில் உள்ள விவசாயிகளிடம் வாங்கி வந்துள்ளேன். பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்தும் 140 முதல் 170 நாட்கள் என நீண்டகால பயிர்களாக உள்ளது. இயற்கையான செடி கொடிகளின் தழை, கால்நடைகளின் கழிவுகள் என இயற்கை உரங்களை கொண்டு சாகுபடி செய்யும் போது, நெற்பயிருக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகம் கிடைக்கிறது. தற்போது வயல்களில் நெற்பயிரை சுற்றி மழைநீர் சூழ்ந்திருந்தாலும் இந்த நெற்பயிர்கள் கிடுகிடுவென வளர்ந்து வருகிறது. சுமார் 5 அடி உயரம் வரை வளரக்கூடிய இந்த பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் பல இடங்களில் இந்த தொடர் மழையினால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் உள்ளது. எனவே, பருவமழையை எதிர்கொள்ளவும், பாதிப்புகளிலிருந்து மீளவும் விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்ய முன் வர வேண்டும். இது போன்ற பாரம்பரிய பழங்காலத்து நெல் ரகங்களால், சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட எந்த நோயும் வராது, உடலுக்கு நல்லது என்றார்.