கடந்த சில நாட்களாக பிஹார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதை போலவும், அவர்களுக்கு தமிழ்நாட்டில் போதிய பாதுகாப்பு இல்லை எனவும் சொல்லி சில வீடியோக்கள் சமூகவலைதளத்தில் அவதூறாக பரவி வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. அவர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் தெரிவித்திருந்தார்.
இதனிடையே பிஹாரில் இருந்து பிஹார் ஐஏஎஸ் அதிகாரிகள் அலோக் குமார் மற்றும் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு வட மாநில தொழிலாளரின் பாதுகாப்பு குறித்து வட மாநில தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும் இடங்களில் ஆய்வு செய்தனர். அவர்களிடம் வடமாநில தொழிலாளர்கள் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் இங்கு நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகிறோம் என தெரிவித்தனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கு வங்கம், பீஹார், உத்ரகாண்ட், ஒடிசா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 700 பேர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் மேற்கு வங்காளம், பீகார், உத்ரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக நிரந்தர கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக எழுந்த புரளியைத் தொடர்ந்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், கட்டுமானப் பணி நடைபெற்று வரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்துக்கு இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று, புலம்பெயர் தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு விருந்தோம்பலில் சிறந்த மாநிலம். இங்கு வந்து தங்கி பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றார்.
அப்போது, புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் இங்கு பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து புகார்கள் ஏதேனும் இருப்பின் உதவி எண் 0421 - 2203313 , 9498101300 , 9498101320 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் வருகின்ற ஹோலி பண்டிகை முன்னிட்டு வடமாநில தொழிலாளர்களுக்கும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இனிப்புகளை ஊட்டி விட்டு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்