இயக்குநர் தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 

Continues below advertisement


தமிழ் திரையுலகில் மாறுபட்ட வாழ்வியல் படைப்புகளால் மக்களை கவர்ந்தவர் இயக்குநர் தங்கர் பச்சான். அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைபேசி, களவாடிய பொழுதுகள் என அவரின் பல படைப்புகள் இன்றளவும் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது. சில படங்களில் நடிகராகவும் தன்னை வெளிப்படுத்திய தங்கர் பச்சான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தை இயக்கியுள்ளார். 


பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன்,  அதிதி பாலன், யோகிபாபு ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். VAU Media  சார்பில் துரை வீரசக்தி கருமேகங்கள் கலைகின்றன படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் அவரது அலுவலகத்தில் வெளியிட்டார். அப்போது இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் தங்கர்பச்சான் , தயாரிப்பாளர் டி. துரை வீரசக்தி ஆகியோர் உடனிருந்தனர். 


கருமேகங்கள் கலைகின்றன படம் பற்றி இயக்குநர் பாரதிராஜா கூறுகையில், இப்படம் தமிழ் திரை வரலாற்றில் மிக முக்கியமான படைப்பாக இருக்குமென்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளியான பாரதிராஜா ஒரு படைப்பை இந்த அளவு புகழ்ந்து பார்த்ததில்லை என கூறினார்.  மேலும் இப்படத்தில் நடித்த பிறகு தான் ஓய்வுபெற்று விடலாம் என்று சொல்லும் அளவுக்கு அவர் கூறியது எனக்கு பேராச்சர்யமாக அமைந்தது. 


இதனைப் பார்க்கும் போது இப்பொழுதே உடனடியாக படம் பார்க்கும் ஆவல் வந்துவிட்டது. விரைவில் படத்தை காட்டுங்கள் எனவும் தெரிவித்தார்.  தொடர்ந்து இயக்குநர் தங்கர்பச்சானுக்கும், தயாரிப்பாளர் டி. துரை வீரசக்திகும் மற்றும் படக்குழுவினருக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். மண்சார்ந்த  படைப்பாக உருவாகியுள்ள கருமேகங்கள் கலைகின்றன படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.