தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி தற்போது வரை பல மாவட்டங்களில் தொடர் கனமழையாக பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. குறிப்பாக வயல் வெளிகளில் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில் டெல்டாவின் காவிரி கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் சாகுபடி பிரதான தொழிலாக அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மயிலாடுதுறை சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது பெய்து வரும் கனமழையில் தப்பி நன்கு வளர்ந்து தண்டு உருளும் பருவத்தில் உள்ள சம்பா பயிர்களில் கொக்கி புழு தாக்குதல் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்த செலவுக்காவது பயிர்கள் விளைந்து கைக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என வேதனை தெரிவித்தனர்.




மேலும் இது குறித்து இப்பகுதி விவசாயிகள் விரிவான கூறுகையில், நாற்றுவிட்டு நடவுசெய்ய தொடங்கியது முதல், தொடர்ந்து மழைபெய்து வருவதால் பயிர்களை தண்ணீர் சூழ்ந்து  பெரும் பாதிப்படைந்துள்ளது என்றும், சீர்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் பல பகுதிகளில் மழைநீர் வடிந்து வருகிறது. இதனால் மழைநீரில் தப்பிய பயிர்களை காப்பாற்ற உரமிடும் பணியை தொடங்கியுள்ளோம் என்றும். ஆனால் மழை நீரில் மூழ்கியிருந்த சம்பா பயிர்களில் கொக்கிப்புழு உருவாகியுள்ளது தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களைக் காப்பாற்ற ஏக்கருக்கு 10 ஆயிரம் வரை கூடுதலாக செலவு செய்து வரும் நிலையில் தற்போது கொக்கிப்புழு உருவாகியிருப்பது தங்களுக்கு மேலும் கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது.  இதனால் கூடுதலாக 5 ஆயிரம் ரூபாய் என ஒரு ஏக்கருக்கு தற்போது 15 ஆயிரம் வரை கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகளாகிய நாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார். 





கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்


தங்கள் நகைகளை அடகு வைத்தும் மேலும் பல வழிகளில் கடன் பெற்று பயிர் செய்த பயிர்கள் பயனளிக்காமல் தங்கள் கண்முன்னே பாழவதை தடுத்து தங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேளாண் துறை அதிகாரிகள் அனைத்து பயிர்களையும் ஆய்வு செய்து கொக்கி கொக்கிப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த உரிய ஆலோசனை வழங்கி, மானிய விலையில்  மருந்துகள் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.