குடகு மலையில் காவேரி அடர்ந்த மலைத்தொடரில் உருவாகி, தமிழ்நாட்டில் ஓடும் காவிரி நதி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது, மரங்களின் செழுமையான வளர்ச்சிக்கு உதவுவது, பாசனத்துக்கு பயன்படுவது, குளங்கள், குட்டைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீராதாரமாக விளங்குவது என, தான் ஓடும் இடங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் பசுமையை பரப்பிச் செல்கின்றது.




காவிரி பல கிளை நதிகளாக, கிளை வாய்க்கால்களாகப் பிரிந்து பல்வேறு ஊர்களில், பல்வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது. அவ்வகையில்,  மயிலாடுதுறை அருகே மகாதானபுரத்தில், காவிரியில் இருந்து பிரியும் கிளை வாய்க்கால் பழங்காவிரி என்ற பெயரில் செல்கிறது. மயிலாடுதுறை அருகே மகாதானபுரம் கிராமத்தில் காவிரியின் கிளை வாய்க்காலாக பிரிந்து, மூவலூர், மாப்படுகை என ஊராட்சிப் பகுதிகளில் 4 கி.மீ தொலைவும், காவிரி நகர் வழியாக மயிலாடுதுறை நகர்ப்புறத்தில் 3.2 கி.மீ தொலைவும் என மொத்தம் 7.2 கி.மீ தொலைவுக்கு ஓடி மயிலாடுதுறையிலேயே ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் பின்புறம் முற்றுப்பெறுகிறது இந்த பழங்காவிரி. அங்கிருந்து, புதிய பழங்காவிரி என்ற பெயரில் சுமார் 8 கி.மீ. தொலைவு ஓடி, காவிரியின் கிளை ஆறான மஞ்சளாற்றில் கலக்கிறது. 




இதன் மூலம் மயிலாடுதுறை  நகராட்சியில் உள்ள 89 குளங்களில், சுமார் 15 குளங்களும்,  மேலும் சில குளங்கள் புதிய பழங்காவிரி மூலமாகவும் நீராதாரம் பெற்றன. அதன்பயனாக, கூறைநாடு செம்மங்குளம், யானை வெட்டிக்குளம், கிளைச்சிறை பின்புறம் உள்ள மட்டக்குளம், நீதிமன்றம் எதிரில் உள்ள அங்காளம்மன் குளம், புளியந்தெரு குளம், மின்வாரிய அலுவலகம் எதிரில் உள்ள குளம், சந்திரிகுளம் உள்ளிட்ட குளங்கள் நீர் நிரம்பிக் காணப்பட்டன.




ஆனால் தற்போது  ஆக்கிரமிப்பின் காரணமாக, குளங்களில் கண்ணீர்  நிரப்புவது, மழைக்காலங்களில் வடிகால் வசதி இன்றி பல்வேறு சிக்கல் ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை நகர பகுதியில் உள்ள காவிரி, பழங்காவிரி ஆறுகளில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகளால் நீர்நிலைகள் பாழாவதை தடுத்து, நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டுமென்று புங்கனூர் நுகர்வோர் பாதுகாப்புக்குழுவைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.




வழக்கை விசாரித்த பசுமை மயிலாடுதுறை தாலுக்கா மூவலூரில் காவிரியின் கிளை ஆறான பழங்காவேரி பிரிந்து சுமார் 7.2 கிலோமீட்டர் சென்று மயிலாடுதுறை நகரில் முடிவடையும் ஆற்றில் உள்ள வீடுகள், காம்பவுண்ட் சுவர்கள், வேலிகள் அமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி உத்தரவிட்டது.  உத்தரவின்பேரில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று தொடங்கியது.  மூவலூர் தலைப்பில் இருந்து சித்தர்காடு வரை இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட உள்ளது. இதில் வீடுகளை தவிர்த்து 24 இடங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்த காம்பவுண்டு சுவர்கள், வேலிகள் ஆகிய ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர் பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றினர். இப்பணிகளை மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, வட்டாட்சியர் ராகவன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கண்ணதாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இப்பணி தொடர்ந்து நடைபெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.