தஞ்சாவூர்: 2026-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறந்ததையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். வாலிபர்கள் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக சரியாக 12 மணியளவில் வெடி வெடித்து மகிழ்ந்தனர்.
மேரீஸ்கார்னர் திருஇருதய பேராலயம்
2025-ம் ஆண்டு நிறைவடைந்து நேற்று நள்ளிரவு 12 மணிக்கு 2026-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறந்தது. இந்த புத்தாண்டு பிறப்பையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள திரு இருதய பேராலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று இரவு நன்றி தெரிவிக்கும் வழிபாடு உதவிபங்குத்தந்தை அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து பேராலய பங்குத்தந்தை பிரபாகர் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. இதில் உதவி பங்குத்தந்தைகள் அரவிந்த், ஜெனித்லாரன்ஸ், ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் இறைமக்கள் பங்குத் தந்தையர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ஆசீர்பெற்றுக்கொண்டனர்.
சிவகங்கை பூங்கா கோட்டை கிறிஸ்து நாதர்
தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் நேற்று இரவு புத்தாண்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இரவு 11.15 மணிக்கு 2025-ம் ஆண்டு இறைவன் செய்த நன்மைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆராதனை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு 2026-ம் ஆண்டு புதிய ஆண்டில் கடவுளுடைய வழிநடத்தலுக்காக சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இந்த ஆராதனையை ஆயர் பெஞ்சமின் நடத்தி சிறப்பு செய்தி அளித்தார்.
இதில் திருச்சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆராதனை முடிந்தவுடன் அனைவருக்கும் கேக் மற்றும் தேநீர் வழங்கப்பட்டன, இதற்கான ஏற்பாடுகளை சேகர குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். புத்தாண்டையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
தஞ்சை நகர் பகுதி தேவாலயங்கள்
தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள சி.எஸ்.ஐ,. தூய பேதுரு ஆலயம், தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலயம், மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம், வடக்குவாசலில் உள்ள அருளானந்தர் ஆலயம் மானம்புச்சாவடி சூசையப்பர் ஆலயம், மாதாக்கோட்டை புனித லூர்து சகாய அன்னை ஆலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புத்தாண்டு கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்
புத்தாண்டையொட்டி அனைத்து தேவாலயங்களிலும் வண்ண, வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 2026-ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு பகுதிகளில் இருந்த வந்த நண்பர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் கேக் வெட்டியும்,. பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். தஞ்சை பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம் பகுதியில் ஏராளமானோர் கூடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
உங்களுடன் நானும்... புத்தாண்டு கொண்டாட்டத்தில் மழை
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தஞ்சையை சேர்ந்த மக்கள் தயாரான நிலையில் நானும் வருவேன் என்று இரவு முதல் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் உற்சாகத்துடன் புத்தாடை அணிந்து தேவாலயங்களுக்கு புறப்பட்டவர்கள் கவலையடைந்தனர். தஞ்சாவூர் நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் விடிய விடிய மிதமான மழை பெய்தது. இதனால் கிராமப்புறங்களில் வாலிபர்கள் வெடி வெடித்து கொண்டாடுவதில் சுணக்கம் ஏற்பட்டது.