தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் புதிய பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் புதிய பாலம் பகுதியில் இணைப்பு சாலை அமைக்க வேண்டி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அய்யம்பேட்டை மதகடி பஜார் அருகே குடமுருட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய  பாலத்திற்கு பதிலாக நெடுஞ்சாலை திட்டங்கள் மூலம் புதிய பாலம்  கட்டப்பட்டுள்ளது. இந்த பால பணிகள் கடந்த  2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த ஆண்டு (2024) நிறைவடைந்தது.

இந்நிலையில் இந்த பாலத்திற்கு தென்புறம் சிலர் வீடுகள் கட்டி குடியிருந்து வந்தனர். இதற்கிடையே புதிய பாலத்திற்கான இணைப்பு சாலை அமைப்பதற்கான அளவீடு செய்த அதிகாரிகள் அப்பகுதியில் வீடுகள் கட்டியருந்தவர்கள் தாங்களே வீடுகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.

Continues below advertisement

ஆனால் இப்பகுதியினர் தங்களுக்கு மாற்று இடம்  கொடுத்தால் தான் தற்போது குடியிருந்து வரும் இடத்தை காலி செய்வோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து கடந்து சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த 6 பேருக்கு வேறு இடத்தில் குடியிருப்புக்கான  வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் தஞ்சை நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் பூங்கொடி, உதவி கோட்ட பொறியாளர்கள் பிலீப் பிரபாகரன், பாஸ்கர், உதவி பொறியாளர் வீரமுத்து மற்றும் அதிகாரிகள் இணைப்புச் சாலை அமைப்பதற்கான இடத்தில் பொக்லின் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இப்பகுதியில் உள்ள மேலும் சிலர் தங்களுக்கும் மாற்று இடத்திற்கான வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறி ஆக்கிரப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களுக்கு  ஆதரவாக  இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்லிஸ்ட் - லெனிஸ்ட்) கட்சியின் மாவட்ட செயலாளர் மாசிலாமணி, ஒன்றிய செயலாளர் பிரபு மற்றும் கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர். 

இதனால் இப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பாபநாசம் தாசில்தார் சந்தனவேல், அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பு, வருவாய் ஆய்வாளர் கலாநிதி, கிராம நிர்வாக அலுவலர்  ரமேஷ் குமார் ஆகியோர் குடியிருப்புவாசிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களுக்கு விரைவில் மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது. அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் புதிய பாலம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதை முன்னிட்டு இப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.