உலகில் மூன்று அசுரர்கள், மக்களை கொன்று குவித்து நாட்டை தும்சம் செய்து வந்தனர். இந்த அசுரர்களை பார்வதிதேவி காளியாக உருமாறியும், மகாலெட்சுமி விஷ்ணுதுர்க்கையாகவும், மகாசரஸ்வதி நிசும்பசூதனியாகவும் உருவெடுத்து 9 நாட்களில் அவர்களை வதம் செய்து உலகை காப்பாற்றினர். இந்த 9 நாட்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதாவது மகாளய அமாவாசைக்கு மறுநாள் தொடங்கும் இந்த நவராத்திரி விழா சரஸ்வதி பூஜை அன்று நிறைவு பெறும்.




இந்த நவராத்திரி விழாவில் ஒவ்வொரு இல்லத்திற்கும் தேவதைகளான அம்மன் தெய்வங்கள் இல்லத்திற்கே வந்து அருள்பாலிப்பதாகவும், உலகில் உள்ள எந்த ஒரு பொருளிலும் இறைவன் உருவம் இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் நவராத்திரி கொலு வைத்து கொண்டாடப்படுகிறது.  இப்படி  ஒவ்வொரு இல்லங்கள், கோயில்களில் அமைக்கப்படும் நவராத்திரி கொலுவிற்கு ஒவ்வொருவரும் அழகிய தெய்வ பொம்மைகளை தேடிப்பிடித்து வாங்கி வந்து கொலு அமைப்பது வழக்கம். இதனால் ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம், சகல பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.




அதன்படி வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நாடெங்கும் நவராத்திரி கொலு கண்காட்சி தொடங்கி அக்டோபர் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதால், கொலுவிற்கு தேவையான பொம்மைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நவராத்திரி கொலு வைத்திருக்கும் நாட்களில், வீட்டிற்கு நண்பர்கள், உறவினர்களை அழைத்து, கொலுவை பார்க்க வைத்து, அவர்களுக்கு தின்தோறும் நெய்வேதியம் செய்யும் உணவுகள், தேங்காய், பழம், பொருட்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.




கும்பகோணத்தை அடுத்த சத்திரம் கருப்பூரில் பரம்பரைத் தொழிலாக நவராத்திரி கொலு  பொம்மைகள் தயாரிக்கும் ரமேஷ் கூறுகையில்,  எனது  மூதாதையர் காலத்திலிருந்து கொலு பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது  சயனபெருமாள் சுவாமி, கருடன், முருகனுக்கு பார்வதி பழம் தருவது, காஞ்சி பெரியவர் சுவாமி, மும்மூர்த்தி சுவாமிகள், ராமானுஜம், கருடாழ்வார், கிருஷ்ணன், வெங்கடாஜலபதி, ராகவேந்திர சுவாமிகள், மாரியம்மன், அன்னபூரணி, வீணை சரஸ்வதி, பாண்டுரங்க ரகுமாயன்சுவாமிகள் உள்ளிட்ட சுவாமி சிலைகளும், மாடு, குதிரை, இசைக்கருவிகள் உள்ளிட்ட பொருட்களையும் நாங்கள் தெய்து வருகிறோம். முழுவதும் காகித பேப்பரை கொண்டு கூழால், ரசாயனம் கலக்காமல் வடிவமைக்கப்பட்ட பொம்மைகள் செய்வதால், மிகவும் இலகுவாக உள்ளது.




இந்த பொம்மைகளை அழகாக்க பல வண்ணங்கள் தீட்டப்பட்டு தமிழகம் மட்டுமின்றி பெங்களூர்,  மும்பை, கொல்கத்தா, புதுதில்லி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.  இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகள் 50 முதல் 2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டு தொடக்கத்திலேயே எங்களுக்கு பொம்மைகள் வேண்டும் என தனியார் வியாபாரிகளிடமும், கோயில், பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்தும், தனிநபர்களிடமிருந்தும் ஆர்டர்கள் வந்துவிடுவதால் நாங்கள் ஆண்டுமுழுவதும் இந்த கொலு பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். கடந்தாண்டு கொரோனா தொற்று காரணத்தால், பொம்மை தயாரிக்கும் பணி முற்றிலும் முடங்கியது. ஆனால் இந்தாண்டு தளர்வு அறிவித்துள்ளதால், மொம்மைகள் வாங்குவதற்கான ஆர்டர்கள் வந்துள்ளன.




கொரோனா தொற்று காரணத்தினால், மொம்மைகள் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்கள் விலை உயர்ந்தாலும், குறைந்தளவில் லாபம் வைத்து, தயாரித்தும் கொடுக்கின்றோம்.  தற்போது நவராத்திரி தொடங்க உள்ளதால் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  நவராத்திரி  கொலு பொம்மைகள் பெரும்பாலும் காகித கூழ் கொண்டு தயாரித்து அதனை கொலுவில் வைப்பது தான் பொதுமக்கள் விரும்புவார்கள். ஆனால் தற்போது பீங்கான், பிளாஸ்டிக் பொம்மைகள் அதிகமாக வந்தாலும் பெரும்பாலானோர் காகித கூழ் கொண்டு மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கொலு பொம்மைகளை தான் விரும்பி வாங்கி செல்கின்றனர். இதனால் கொலு பொம்மைகள் உற்பத்தியும், விற்பனையும் கும்பகோணம் பகுதியில் நடைபெற்று வருகிறது உள்ளது என்றார்.