திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரயில் நிலையம் அருகே உள்ள மதுபான கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்குடி ரயில் நிலையம் அருகில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடையில் அன்பு மனோகரன் என்பவர் மேற்பார்வையாளராகவும் சரபோஜி ராஜ், ராஜா ஆகியோர் விற்பனையாளராகவும் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இருவரும் வியபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டிவிட்டு சென்று உள்ளனர்.



 

இந்த நிலையில் நேற்று காலை அவ்வழியே சென்ற சிலர் மதுபான கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து மேற்பார்வையாளர் அன்பு மனோகரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் கடைக்கு வந்த அவர் திருட்டு நடந்துள்ளதை உறுதிப்படுத்தி கொண்டு மன்னார்குடி நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் உத்தரவின் பெயரில் நகர உதவி ஆய்வாளர் முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உதயகுமார், சோமசுந்தரம், உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் கடப்பாறையை கொண்டு கடையின் இரும்பு ஷட்டரை உடைத்து மேலும் இரண்டு பூட்டுகளை உடைத்து உள்ளே சென்று கல்லாவில் வைக்கப்பட்டிருந்த 55 ஆயிரம் ரொக்கப்பணம், மற்றும் ஒரு லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.



 

மேலும் கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அடையாளம் கண்டு விடுவார்கள் என்ற நோக்கத்தில் கொள்ளையர்கள் கடையின் வெளிப்புறம் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து அதனையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதும் தெரிய வந்துள்ளது. இந்த திருட்டுச் சம்பவத்தில் இரண்டு அல்லது மூன்று பேர் ஈடுபட்டு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அனைவரும் மது போதையில் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக 48 பாடல்கள் அடங்கிய மதுபான பெட்டி ஒன்றை தூக்கி செல்ல முடியாமல் கடை அருகே வைத்துவிட்டு சென்று விட்டது தெரியவந்தது. இதையடுத்து திருவாரூரில் இருந்து வந்த கைரேகை நிபுணர் தடயங்களை சேகரித்தனர். காவல்துறை மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கடையில் சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து அரசு மதுபான கடை மேற்பார்வையாளர் அன்பு மனோரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மன்னார்குடி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.