தஞ்சாவூர்: அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியல் குறித்து அமைச்சர்கள்தான் பதில் சொல்ல வேண்டும் என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.


சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூரில் அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அவர் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல் உண்மையா? இல்லையா? என்பது குறித்து அமைச்சர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். அதிமுக ஊழல் பட்டியலை ஏன் வெளியிடவில்லை என்பதை அண்ணாமலையிடம்தான் கேட்க வேண்டும்.


நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து நடப்பாண்டு இறுதியில் முடிவு எடுக்கப்படும். திருச்சியில் ஓ. பன்னீர்செல்வம் நடத்தும் மாநாட்டுக்கு என்னை அழைப்பார்களா? என்பது எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கட்சி துணைப் பொதுச் செயலர் எம். ரெங்கசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.


திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக - திமுக இடையேயான கருத்து மோதல் அதிகரித்துள்ளது. தமிழக அரசின் பல துறைகள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்து வந்தார். இதற்கிடையில் அண்ணாமலையின் வாட்ச் விவகாரம் சூடு பிடிக்க தொடங்கியது.


அது வெளிநாட்டு வாட்ச் என்றும், பல லட்சம் மதிப்புடையது என்றும் திமுகவினர் விமர்சித்தனர். வெளிநாட்டு வாட்ச் அல்ல, ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் தயாரிக்கப்பட்ட வாட்ச் என்று அண்ணாமலை பதிலடி தந்தார். இப்படி திமுக – பாஜக இடையிலான முட்டல் மோதல்கள் தொடர்ந்து வந்தது. இதையடுத்து வாட்ச் வாங்கியதற்கான ரசீதை விரைவில் வெளியிடுவதாகவும் அண்ணாமலை கூறினார். மேலும்  ஏப்ரல் 14-ம் தேதி திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்றும் அண்ணாமலை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.


இதையடுத்து சொன்னது போலவே இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், காவல் பணியில் இருந்த போது லஞ்சப்பணத்தில் ரஃபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவினர் தகவல் பரப்பினர்.


ரஃபேல் வாட்ச் வரிசையில் 147-வது வாட்சை நான் வாங்கினேன். 3 லட்சத்திற்கு இந்த வாட்சை நான் வாங்கினேன். சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து ரஃபேல் வாட்சை வாங்கினேன். 2021ம் ஆண்டு இந்த வாட்சை வாங்கிய அவர், மே மாதம் என்னிடம் கொடுத்தார்" என்று தெரிவித்து ரஃபேல் வாட்ச் பில்லையும் வெளியிட்டார்.


தொடர்ந்து, திமுக எம்.பி ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி, கலாநிதி மாறன், டி.ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், வடசென்னை எம்.பி கலாநிதி வீராசாமி, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஸ், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் அடங்கிய வீடியோவை அண்ணாமலை வெளியிட்டார்.


இதன்படி திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதான் தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.