திருத்துறைப்பூண்டியில் மத்திய அரசை கண்டித்து இன்று மதுரையை சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் நந்தினி, நிரஞ்சனா இரண்டு நபர்கள் துண்டு பிரசுரம் விநியோகித்தனர். மத்திய அரசை கண்டித்து தொடர் பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுர விநியோகங்களை இவர்கள் இருவரும் செய்து வருகின்றனர். அந்த வகையில் திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையப் பகுதியில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

 

இதனை அறிந்த பாஜகவினர் நிகழ்விடத்துக்கு வந்து பெண்  வழக்கறிஞர்கள் இருவரிடமும் இருந்த துண்டு பிரசுரங்களை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் இரண்டு பெண் வழக்கறிஞர்களிடம் பாஜகவினர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து நந்தினி, நிரஞ்சனா ஆகிய இரண்டு பெண் வழக்கறிஞர்களும் திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பெண் வழக்கறிஞர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ரஜினி கலைமணி அவர்களை செருப்பால் அடித்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் இரண்டு வழக்கறிஞர்களையும் கைது செய்து வேனில் ஏற்றினர்.



 

இதனால் வழக்கறிஞர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ரஜினி கலைமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் வழக்கறிஞர்கள் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகிய இருவர் மீதும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்குதல் உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.



 

இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் இடம் கேட்டதற்கு, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ரஜினி கலைமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்குதல் உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் எந்த புகார் கொடுக்கப்படாத காரணத்தினால் பாஜகவினர் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை தொடர்ந்து இது சம்பந்தமாக விசாரணை என்பது தீவிர படுத்தப்பட்டுள்ளது என திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்