தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைத்தல் தொடர்பாக  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.


மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில், தமிழ்நாடு சுற்றுலா பண்பாடு (ம) அறநிலையத்துறை அரசு முதன்மை செயலர் மணிவாசன், அருங்காட்சியக ஆணையர் அரவிந்த் முன்னிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


பின்னர் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது:-


சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின் போது உலகை ஆண்ட சோழர்களின் பங்களிப்பை போற்றவும், அக்கால கலைப்பொருட்கள் நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும் தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


இந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக தஞ்சாவூர் பெரியகோயில் அருகே மேம்பாலம் அருகில் உள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே தேர்வு செய்து, துறைச் செயலர் உள்ளிட்ட அலுவலர்களிடம் காண்பித்துள்ளார். இந்த இடம் ஏற்புடையதாக உள்ளது என துறைச் செயலர் கூறியதன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது.




தஞ்சாவூர் மாநகரில் இவ்வளவு பெரிய இடம் கிடைத்திருப்பது அரிய வாய்ப்பாக இருக்கிறது.  முதலமைச்சரின் எண்ணம் வீண் போகாத வகையில் சிறந்த அருங்காட்சியகத்துக்கு இந்த இடம் ஏற்புடையதாக உள்ளது. தஞ்சாவூரில் சோழர்களின் பெருமையை பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டார். இந்திய வரலாற்றில் சோழர்களின் காலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கடல் கடந்த வாணிபமும்,போர்வெற்றியும் அவர்களின் ஆட்சிமுறையும் இந்தியாவில் இருந்த எத்தனையோ அரசாட்சிகள் நடந்திருந்தாலும், முதன்மையாக சோழர்களின் காலம் விளங்கியது.


தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டிய மாமன்னன் இராசராச சோழன், கங்கைகொண்ட சோழபுரம் கட்டிய ராஜேந்திர சோழன் என பிற்காலச் சோழர்களின் பங்களிப்பு தமிழகத்தில் நிலை நாட்டிய பெருமை உண்டு. சோழர்களின் போர் வெற்றி, கோவில் பணிகள்,சமுதாயப் பணிகள்,கலைத்திறன் என எல்லாவற்றையும் விளக்கக் கூடிய வகையில் அருங்காட்சியகம் அமைய உள்ளது.


ஏற்கனவே 1000 ஆண்டு விழாவின்போது சோழர்களின் பெருமையை விளக்கும் விதமாக மிகப்பெரிய கண்காட்சியை நடத்தப்பட்டது. அது ஒரு குறிப்பிட்ட காலம் தான் நடைபெற்றது. தற்போது நிரந்தரமாக இந்த அருங்காட்சியகம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைய உள்ளது. தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் பெரிய கோவில் அருகே அமைந்துள்ளதால் மிகவும் சிறப்பாக உள்ளது. பெரிய கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு எளிதாக அருங்காட்சியத்திற்கு வந்து பார்ப்பதற்கு சிறந்த இடமாக அமைந்துள்ளது. விரைவில் முதல்வரின் ஒப்புதலின் பேரில் கட்டுமான பணிகள் துவங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 


இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன், (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி , மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், தஞ்சாவூர் அரசு அருங்காட்சியம் காப்பாட்சியர் சிவகுமார் (பொ) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.