மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதிகளில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட வரதாச்சாரியார் பூங்காவில் 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு சிலை வைக்க பீடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை அமைச்சர் ஆய்வுசெய்தார். தொடர்ந்து, மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு சிலை அமையவுள்ள இடம், சீர்காழியில் தமிழிசை மூவர் மணிமண்டபம் பராமரிப்பு பணி ஆகியவற்றையும் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறுகையில், “மயிலாடுதுறையில் வரதாச்சாரியார் பூங்காவில் நடைபெற்றுவரும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு உருவச்சிலை அமைக்கும் பணி ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட நூலகம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தில்லையாடி வள்ளியம்மை நினைவு மணிமண்டபம் பராமரிப்பதற்கு ரூபாய் 24 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல்வர் ஒப்புதல் அளித்தவுடன் பணி தொடங்கப்படும். மாவட்ட நூலகம் அமைப்பதற்கு 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. சீர்காழி தமிழ் இசை மூவர் மணிமண்டபம் பராமறிப்புக்கு 47 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிறந்து வளர்ந்த தமிழிசை மூவர்களான மாரிமுத்தா பிள்ளை, அருணாச்சல கவிராயர், முத்து தாண்டவர் ஆகிய மூவரும் உலக அளவில் முதன் முதலில் இசையை வளர்த்தவர்கள், இவர்களுக்கு கடந்த 2010 - ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் மணிமண்டபம் கட்டப்பட்டது. அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழிசை மூவர் மணிமண்டபத்தை பராமரிக்காமல் பழுதடைந்து விட்டது, திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் அதனை பராமரிக்காமல் கிடப்பில் போடப்பட்டதால் கட்டிடம் முழுவதும் பழுதடைந்து காணப்படுகிறது, தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழையும் தமிழுக்காக போராடியர்களுக்கும் மணிமண்டபம் மற்றும் சிலைகள் அமைத்தும், அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்” என்றார்.
உலக அளவில் தமிழிசையை வளர்த்த மூவர்களின் மணி மண்டபம் பழுதடைந்து கிடப்பதால், அதனை பராமரிப்பு செய்து புதுப்பிக்க ரூபாய் 47 லட்சம் நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்து பணி தொடங்க உள்ள நிலையில் தற்போது தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் வந்து ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு பணி குறித்து எடுத்துரைத்தார். மேலும் கொரோனா காலக்கட்டத்தில் தடைப்பட்ட தமிழிசை மூவர் விழா உள்ளிட்ட பல விழாக்கள் இனி வரும் காலங்களில் நடைபெற வழிவகை செய்யப்படும் என்றார். அப்பொழுது பூம்புகார், சீர்காழி ,மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதாமுருகன், பன்னீர்செல்வம், ராஜ்குமார், சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் உடனே இருந்தனர்