தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி டி.பி.சானிடோரியம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள குளத்தில் இருந்து காதலனால் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் மண்டையோடு, எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் வாத்தியநேத்தல் கிராமத்தை சேர்ந்தவர் உடையார் (50). விவசாய தொழிலாளி. இவரது மகள் வாசுகி (25). 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இதே பகுதியை சேர்ந்த ராமு என்பவரின் மகன் மாதவன் (25). இவருக்கும், வாசுகிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது.





இந்நிலையில் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் தனக்கு சொந்தமான ஆடுகளை கிடை போடும் பணிக்காக வந்துள்ளார். இதனால் செங்கிப்பட்டி பகுதியிலேயே மாதவன் தங்கி இருந்தார். அவ்வபோது ஊருக்கும் சென்று வந்துள்ளார். இவ்வாறு ஊருக்கு போகும் போதெல்லாம் வாசுகியை சந்தித்து பேசுவதும், நெருக்கமாக இருப்பதும் வழக்கமாம்.  இதனால் வாசுகி கர்ப்பம் அடைந்துள்ளார். இதற்கிடையில் ஊரிலிருந்து செங்கிப்பட்டி பகுதிக்கு மாதவன் திரும்பி வந்து விட்டார்.

தொடர்ந்து வாசுகி தான் கர்ப்பம் ஆனதால் குடும்பத்தினருக்கு பயந்து கொண்டு இருந்துள்ளார். நாளடைவில் அப்பா கண்டுபிடித்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்த வாசுகி மாதவனை தேடிக் கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். வாசுகி காணாமல் போனது குறித்து அவரது தந்தை உடையார் கீழத்தூவல் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வாசுகியை காணவில்லை என்று போலீசார் போஸ்டர் அடித்து விளம்பரமும் செய்திருந்தனர்.





இந்நிலையில் கீழத்தூவல் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் வாசுகியும், மாதவனும் காதலித்து வந்தது தெரிய வந்தது. இதனால் மாதவன் குறித்து போலீசார் விசாரித்த போது அவர் செங்கிப்பட்டி பகுதியில் ஆட்டு கிடை போட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் மாதவன் ஊருக்கு வந்திருப்பதை அறிந்த கீழத்தூவல் போலீசார் அவரை பிடித்து தீவிர விசாரணை செய்தனர்.

அப்போது வாத்தியநேத்தலில் இருந்து வந்த செங்கிப்பட்டி பகுதிக்கு வந்த வாசுகி, மாதவனை சந்தித்து தான் கர்ப்பமாக இருப்பதாகவும், உடனே தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி வற்புறுத்தி உள்ளார். ஆனால் மாதவன் இதற்கு மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இனியும் வாசுகியை விட்டு வைத்தால் அவர் பிரச்சினை செய்வார் என்று எண்ணி தனது அண்ணன் திருக்கண்ணனுடன் சேர்ந்து செங்கிப்பட்டி டி.பி. சானிடோரியத்திலிருந்து அயோத்திப்பட்டிக்கு செல்லும் கட் ரோட்டில் அறவே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அங்குள்ள குளம் ஒன்றில் வாசுகியை மாதவனும், திருக்கண்ணனும் சேர்ந்து நீரில் அழுத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தை அங்கேயே விட்டு விட்டு வழக்கம் போல் கிடை போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிய வந்தது.





தொடர்ந்து மாதவன் காட்டிய குளம் பகுதிக்கு திருவையாறு டிஎஸ்பி ராஜ்மோகன், பூதலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், செங்கிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் கீழத்தூவல் போலீசார் சென்று பார்வையிட்டனர். சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்கும் மேல் ஆன நிலையில் குளக்கரை பகுதியில் மண்டையோடுகள், எலும்புகள் என சிதறி கிடந்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதாலும் சுற்றிலும் கருவை முள் காடுகள் இருப்பதால் நாய், நரி ஆகியவை குளத்தின் மிதந்த சடலத்தை இழுத்து தின்று குதறி போட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் வாசுகியின் மண்டையோடு, எலும்புகள், தலைமுடி, ஆடைகள் போன்றவற்றை சேகரித்தனர். இதையடுத்து மாதவன், திருக்கண்ணன் இருவரையும் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் செங்கிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது