மேட்டூர் அணை நிரம்பி வருவதால் உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதால், அந்த நீர் கொள்ளிடத்தில் திறந்துவிடப்படும் என்பதால் ஆறுகளின் கரையோரம் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழக முதல்வரின் அறிவுரையின்படி, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளான 640 ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வருவதால், அதனை கண்காணிக்கவும், மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளாக 195 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. அதன் உபரி நீர் திறக்கப்பட இருப்பதால், ஆற்றங்கரையோரத்தில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட இருப்பதால் அதன் கரையோரத்தில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது குறித்து அப்பகுதி மக்களிடம் தெரிவித்து வருகின்றோம். கொள்ளிடம் ஆற்றுக்குள் கால்நடைகளை யாரும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம்.
மேலும் பொதுமக்கள் ஆற்றங்கரைக்கும், ஏரிகளுக்கும் தேவையில்லாமல் செல்ல வேண்டாம், பொதுமக்கள் கால்நடைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மழை நீர் வடிய தேவையான இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் துார் வாரப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 24 மணி நேரம் செயல்படும் எண் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தயார் நிலையில் உள்ளது. மேலும், மழைவெள்ள பாதிப்புகளை தடுக்கும் விதமாக 115 இடங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதே போல் களப்பணியில் ஈடுபடுத்த பணியாளர்களும் தேவையான அளவு உள்ளனர்.
மரங்கள் கீழே விழுந்தால் உடனடியாக அகற்ற மரம் அறுக்கும் இயந்திரங்களும் போதிய அளவு உள்ளது. ஜேசிபி இயந்திரங்களும், ஜென்ரேட்டர் இயந்திரங்களும் தேவையான அளவு உள்ளது. மழை பாதிப்புகளை கண்காணிக்க மண்டல அளவில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள், மழை நீர் தேங்கி பொது மக்கள் பாதிக்கப்பட்டால், உடனடியாக களத்தில் இறங்கி, பணியாற்றுவதற்கு அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளோம், வரும் வடகிழக்கு பருவ மழை மற்றும் ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டாலும், பொது மக்கள் யாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.