மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் காந்திநகர் பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பாக புதிய 5ஜி சேவைக்கான கோபுரம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அதே பகுதியைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்களின் கருத்து கேட்காமலும், ஊராட்சி மன்ற நிர்வாக அனுமதி பெறாமலும், கடந்த இரண்டு நாட்களாக இரவோடு இரவாக இந்த பணி நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், குடியிருப்பு, பள்ளிக்கூடம், மருத்துவமனை அருகருகே அமைந்துள்ள இடத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியிலேயே 5ஜி செல்போன் கோபுரம் அமைக்கப்படுவதை தடை செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் அதிலிருந்து ஏற்படும் கதிர்வீச்சால் மாணவர்கள், பொதுமக்கள், நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என குற்றம் சாட்டிய பொதுமக்கள் உடனடியாக கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த கோரியும் அமைக்கப்பட்ட கோபுரத்தை அப்புறப்படுத்த வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்படாவிட்டால் பொதுமக்கள் ஒன்று திரண்டு மிகப்பெரிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். அனைவரிடமும் செல்போனும் இன்டர்நெட்டின் வேகம் அதிகம் இருக்க வேண்டும் என்னும் மக்கள் மத்தியில், 5ஜி செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்