தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு இருந்த போலீசார் முதியவரிடம் இருந்து பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர்.


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் சிவக்கொல்லை இந்திரா நகரை சேர்ந்தவர் நாகூர் பிச்சை (63). இந்த அந்த பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக வந்தார்.


மனுவை, பதிவு செய்து விட்டு கூட்ட அரங்கில் கொடுப்பதற்காக வந்தார். அப்போது அங்கு வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் போலீசார் நாகூர்பிச்சை வைத்திருந்த பையை சோதனை செய்தார். அதில் ஒரு கேனில் பெட்ரோல் இருந்தது தெரிய வந்தது. உடன் அந்த பெட்ரோல் கேனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நாகூர் பிச்சையிடம் விசாரித்தபோது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க எடுத்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


பின்னர் அவரை சமாதானப்படுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். அதன்படி நாகூர்பிச்சை, கலெக்டர் தீபக்ஜேக்கப்பிடம் மனு கொடுத்தார். தொடர்ந்து கலெக்டர் தீபக் ஜேக்கப் அந்த மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பட்டுக்கோட்டை டிஎஸ்பிக்கு அனுப்பி வைத்தார்.


தொடர்ந்து நாகூர்பிச்சை கூறுகையில், நான் 2010-ம் ஆண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றேன். அப்போது எனக்கு சொந்தமான 10 சென்ட் நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு பவர் எழுதி கொடுத்து விட்டு ரூ.8 லட்சம் பெற்றேன். நிலத்தை விற்றால் மீதி பணத்தை கொடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.


இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஊருக்கு திரும்பி வந்தேன். அப்போது நிலத்தை விற்காததால், நிலத்தை தாருங்கள் என பவர் எழுதி கொடுத்தவரிடம் கூறினேன். ஆனால் அவர் நிலத்தை விற்று விட்டு மீதி தொகை கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மேலும் அந்த பகுதியை சேர்ந்த வக்கீல் ஒருவரிடம் கூறி வழக்கு தாக்கல் செய்யுமாறு ரூ.1.50 லட்சத்தை நாகூர் பிச்சை கொடுத்துள்ளார். அவரும் வழக்கு தாக்கல் செய்யாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. எனவே வக்கீலிடம் இருந்து பணத்தை பெற்றுத்தருமாறும், தனது நிலத்தை மீட்டுத்தருமாறும் ஏற்கனவே 3 முறை மனு கொடுத்துள்ளார். எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது 4-வது முறையாக மனு கொடுத்து விட்டு தீக்குளிக்கும் நோக்கில் பெட்ரோல் கேனுடன் வந்துள்ளார் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.