மயிலாடுதுறை தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் ஊதிய நிலுவைத் தொகை மற்றும் ஓய்வூதிய பணப்பயன்களை வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் 1987 -ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 700க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருந்தனர். 23 ஆயிரம் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த ஆலையானது, ஒரு டன்னுக்கு 97 கிலோ உற்பத்தி அரவை தந்தது. 1993 ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது.
இந்நிலையில் 1994 -ஆம் ஆண்டு 33 கோடி ரூபாயில் கூட்டுறவு சர்க்கரை ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம் பணிகளை முறையாக செய்யவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில், ஒரு டன்னுக்கு 59 கிலோ மட்டுமே சர்க்கரை அரவை தந்து நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில், நஷ்டத்தை சந்தித்து வந்த ஆலையை மறுசீரமைப்பு செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 2015 -ம் ஆண்டில் 56 கோடி ரூபாய் நிதி ஆலை புனரமைப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்தார்.
ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஆலையை புனரமைப்பதற்கான நிதியை தமிழக அரசு வழங்கவில்லை. தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் 2017 -ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. ஆலையில் வேலை செய்த ஊழியர்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது இந்த ஆலையில் பணிபுரியும் மீதமுள்ள தொழிலாளர்களுக்கு 30 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. மேலும், ஓய்வூதியர்களுக்கு பண பலன்கள் வழங்கப்படாமல் உள்ளது. இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சர்க்கரை ஆலையின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆலை தொழிலாளர்களின் நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் வாரிசுதாரர்களின் பணப்பலன்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், மூடப்பட்ட சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வலியுறுத்தப்பட்டது. ஆலையின் சிஐடியு செயலாளர் ஜெயபால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் மற்றும் ஆலை ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.