தஞ்சாவூர்: தஞ்சை அருகே 8.கரம்பை பைபாஸ் சாலையில் விவசாயிகள் கோடை உழவாக சாகுபடி செய்திருந்த உளுந்தை காயவைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.


தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். நடப்பாண்டு வழக்கம் போல் கடந்த ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இதற்கிடையில் கோடை உழவாக தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் பகுதியில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. புரதச்சத்து மிகுந்த உளுந்து, குறுகிய காலத்தில், மிகக்குறைந்த செலவில் விவசாயிகளுக்கு அதிக லாபத்தை அளிக்கும் பயிராக உள்ளது. விதைப்பு செய்த 65 முதல் 75 நாட்களுக்குள் செடிகளில் உள்ள காய்கள் நன்கு முற்றி காய்ந்தவுடன் அறுவடை செய்யப்படும்.


அந்த வகையில் தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் பகுதியில் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்திருந்த உளுந்தை அறுவடை செய்தனர். தொடர்ந்து அறுவடை செய்யப்பட்ட உளுந்து செடிகளை திருவையாறு பைபாஸ் சாலையில் காயவைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.




சாகுபடி செலவுகளை விட கூடுதல் லாபமும் கிடைக்கும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சரியான முறையில் சாகுபடியை மேற்கொண்டால் லாபம் கிடைக்கும். அதிபட்சம் 80 நாட்களுக்குள் அறுவடையை முடித்து விடலாம். அறுவடை முடித்து தற்போது செடிகளை காயவைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். விளைச்சலும் நன்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்தனர்.


முன்பு அதிகளவில் உளுந்து, பயறு மற்று எள் பயிரிட்ட விவசாயிகள் தற்போது அதன் பரப்பளவை குறைத்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மானாவாரி நிலங்களில் மட்டுமே தற்போது எள் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் மாற்றுப் பயிர் சாகுபடியில் விவசாயிகள் தற்போது ஈடுபட தொடங்கி உள்ளனர்.


அந்த வகையில் தஞ்சை மாவட்டம் செல்லப்பன்பேட்டை, முன்னையம்பட்டி பகுதிகளில் மட்டும் கம்பு , சோளம் போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இருப்பினும் ரெட்டிப்பாளையம் உட்பட பல பகுதிகளில் விவசாயிகள் நீர் இருப்புக்கு தகுந்தவாறு உளுந்து சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு சாகுபடி செய்யப்படும் உளுந்தை வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இம்முறை கோடை உழவில் உளுந்து தெளித்திருந்த விவசாயிகள் தற்போது அறுவடை முடித்து வெயிலில் காய வைத்து உளுந்தை பிரித்தெடுக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். குறைந்த செலவில் அதிக லாபம் கொடுக்கும் பயிராக உளுந்து சாகுபடி உள்ளது.


நெல்லுக்குப் பின் பயறு வகை பயிர் சாகுபடியில் உற்பத்தி திறன் குறைவுக்கு பருவம் தவறி விதைத்தல், உற்பத்தி திறன் குறைந்த விதைகளை பயன்படுத்துதல், பயிர் எண்ணிக்கையை சரிவர பராமரிக்காதது, களை நிர்வாகத்தை கவனிக்காமல் விடுவது, பயிர் வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்தாமல் இருப்பது, பூக்கும் தருணம் மற்றும் காய்கள் வளர்ச்சி அடையும் தருணங்களில் வறட்சி நிலவுவது, சரியான தருணத்தில் பூச்சி மற்றும் நோய்களை கண்டறிந்து பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது போன்றவை உளுந்து, பயறு சாகுபடியில் விளைச்சல் குறைவதற்கு காரணங்களாக உள்ளன. சரியான முறையில் சாகுபடி செய்தால் நிச்சயம் லாபம்தான் என்றும் விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர் 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள  https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.