கேரளா மாநிலத்தில் எலி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இருக்கும் பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது சுகாதார துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
ஜூன் 8 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதனால் அங்கு கடந்த ஒரு மாத காலமாக கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக பருவங்கள் மாறும் போது காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படுவது வழக்கமான ஒன்று. அதன்படி தற்போது கேரள மாநிலத்தில் எலி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் அதிகப்படியாக பரவி வருகிறது.
பக்கது மாநிலம் என்பதால் தமிழ்நாட்டில் பரவும் அபாயம் இருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டிலும் கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து டெங்கு காய்ச்சல் பரவலாம் என சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கேரளாவில் எலி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகளை பொது சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.
பள்ளி கல்லூரி வளாகங்களில் கொசு உற்பத்தியாகமல் தடுத்து ஆய்வை மேற்கொண்டு அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கல்வி நிறுவனங்களும் உள்ளாட்சி அமைப்புகளும் பொது சுகாதாரத் துறைக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேல்நிலை கீழ்நிலை தொட்டிகளை சுத்தமாகவும் குளோரின் கலந்தும் பராமரிக்க வேண்டும், அதேபோல் மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டால் துணை சுகாதார இயக்குனர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதார அலுவலர்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.