பெரும்பாலான இடங்களில் நமது அடையாள ஆவணமாக பயன்படுத்தப்படும் ஆதார் அட்டை மிகமுக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். பல முக்கிய பணிகளுக்கு ஆதார் தேவைப்படுகின்றது. ஆதார் அட்டையின் அனைத்து விவரங்களும் முற்றிலும் சரியானவையாக இருப்பது மிகவும் முக்கியமாகும். பிறந்த நாள், பெயர், முகவரி போன்றவற்றை சரியாக நிரப்புவது அவசியம். இல்லையெனில் ஆதார் தொடர்பான பல வேலைகள் சிக்கிக்கொள்ளக்கூடும்.




ஆதார் அட்டையில் கொடுக்கப் பட்டுள்ள பெயர், பிறந்த தேதி போன்ற பல தகவல்களை ஆன்லைனில் மாற்றலாம். ஆனால் முகவரியை மாற்றுவதில் சிக்கல் உள்ளது. இந்த பிரச்சினை பெரும் பாலும் வாடகை வீடுகளில் வசிப் பவர்களுக்கு வருகிறது. ஏனெனில் வீட்டை மாற்றிய பின் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மீண்டும் மாற்றுவது கடினமாக இருக்கிறது. ஆதார் அட்டையில் நிரந்தர முகவரியை மாற்ற மக்கள் ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும். அங்கே அவர்கள் அனைத்து துணை ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு தான், ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவதற்கான பயன்பாட்டைப் பயன்படுத்த முடியும். ஆன்லைனில் இதனை மாற்றுவதற்கான வசதி இருந்தாலும், தேசிய மயமாக்கபட்ட, தனியார் வங்கிகள் மற்றும் அரசு இ சேவை மையங்களை நோக்கித்தான் ஏழை எளிய மக்கள் செல்கிறார்கள்.




முகவரி மாற்றத்திற்கு குரூப் ஏ மற்றும் பி அலுவலர்கள் கையெழுத்து போட்டால்தான் முகவரியை மாற்றமுடியும் என்றநிலை உள்ளது. இந்த கையெழுத்துக்கு அதிகபட்சம் ரூ.300 வசூலிக்கப்படுகிறது. மேலும் அரசு இ- சேவை மையத்தில் அதிகபட்சம் ரூ.100 முகவரி மாற்றத்திற்கு சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதே நேரம் இச்சேவையை அளிக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இதற்கான சேவை கட்டணத்தை தங்களின் விருப்பம் போல வசூலிக்கிறார்கள். இதனால் ஒருவர் தன் முகவரி மாற்றத் திற்காக குறைந்தபட்சம் 500 ரூபாய் செலவழிக்கவேண்டியுள்ளது. 




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு ஆதார் சேவை மையம் இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில் இங்கு போதிய ஊழியர்கள் இல்லாததால் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்து கிடக்கின்றனர். இணைய சேவை குறைபாடால் ஒரு கணினி மட்டுமே இயங்குவதால் நாள் முழுவதும் காத்திருந்தாலும், பணிகள் முடிவடையாத நிலை உள்ளதாகவும், சில நேரங்களில் மூன்று நாட்கள் அலைந்துதான் ஆதார் சேவை மற்றும் திருத்தங்களை செய்ய முடிவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் கிராம புறங்களில் இருந்து வருபவர்கள், முதியோர், மகளிர், குழந்தைகள் என பலரும் கடும் அவதியடைகின்றனர். மேலும் இந்த கொரோனா காலக்கட்டத்தில் சமூக இடைவெளியின்றியும், முககவசம் இன்றியும், கூட்டமாக நிற்கின்றனர். கடும் வெய்யிலிலும் திறந்த வெளியிலும் நிற்கும் சூழல் நிலவுகிறது. மக்களின் சிரமத்தினை கருத்தில் கொண்டு அரசு கூடுதல் ஊழியர்களை நியமித்தும் டோக்கன் முறையை அமல்படுத்தவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.