மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களுக்கு இடையே பிரச்சனை நிலவி வருகிறது. இதன் காரணமாக தடை செய்யப்பட்ட வழக்கு அனுமதி கேட்டும், தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும், இருதரப்பு மீனவர்களும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் இரு மீனவ கிராமங்களுக்கு இடையே மோதல்களும் நடைபெற்ற நிலையில், இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை விசைப்படகு மற்றும் பைபர் படகு கொண்டு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல போவதில்லை என கூறி மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் கட்டுமரத்தை நம்பி தொழிலில் ஈடுபடும் ஒரு சில மீனவர்கள் மட்டும் தங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கடற்கரையோரம் கட்டு மரங்களை பயன்படுத்தி மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொட்டாயாமேடு சுனாமி நகரை சேர்ந்தவர் மீனவர் ஜெயபால். இவர் இன்று காலை கட்டுமரத்தின் மூலம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார், அப்போது கரையோர பகுதியில் மீன்பிடிக்க முயன்ற போது தீடிரென கடல் சீற்றம் ஏற்பட்டு அதில் எழுந்த பெரிய அலையில் சிக்கி கட்டுமரம் கவிழ்ந்துள்ளது. கட்டுமரம் துயர் கடலில் ஜெயபாலும் விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் உடனே விரைந்து ஜெயபாலை காப்பற்ற முயன்றனர்.
ஆனால் அலையில் சீற்றத்தால் அவர் கடலில் மூழ்கி காணாமல்போனார். தொடர்ந்து சக மீனவர்கள் ஜெயபாலை தேடிய நிலையில் சற்று நேரத்தில் அதே பகுதில் ஜெயபால் உடல் கரை ஒதுங்கியது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த கடலோர காவல் படை போலீசார் அவரது உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புயல், வெள்ளம், மழை என இயற்கை சீற்றம் எதுவென்றாலும் முதலில் பாதிக்கப்படுவது மீனவர்கள் ஆகவே இருக்கின்றன. ஆண்டில் பாதி நாட்கள் புயல் வெள்ளம் மழை என வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். மேலும் அரசு விதிக்கும் மீன்பிடி தடை காலம் காரணமாக இரண்டு மாத காலம் மீன்பிடி தொழிலில் ஈடுபடாமல் இருக்கும் மீனவர்களுக்கு, இயற்கை சாதகமாக உள்ள காலகட்டத்தில் மட்டுமே தங்கள் உயிரை துச்சமென நினைத்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் படகில் செல்லும் மீனவர்களுக்கு கடல் சீற்றம் போன்ற எதிர்பாராத காரணங்களால் படகுகள் விபத்துக்குள்ளாகும் படகிலிருந்து நிலைதடுமாறி மீனவர்கள் கடலில் விழுந்து உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இது போன்று உயிரிழப்பு ஏற்படும் மீனவரின் குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.