மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்தோறும் நடைபெறும் மாவட்ட ஆட்சியரின் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்திருந்தனர். அந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அந்தந்த துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விளக்கம் அளிப்பதை ஆட்சியர் மகாபாரதி நடைமுறைப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. இதனால் விவசாயிகள் பிரச்சனை குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை எப்படி கூற முடியும்? என்று கேள்வி எழுப்பிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார். மேலும், அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதை ஏன் உறுதிப்படுத்தவில்லை என்று நேர்முக உதவியாளரை கடிந்து கொண்டார். தாமதமாக வந்த ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் மஞ்சுளாவிடம் விளக்கம் கேட்டு கடிந்துகொண்டார்.
அதிகாரிகள் வரவில்லை என்றாலும் பிரச்னைகள் குறித்து வரப்பெற்ற மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து ஒரு வாரத்தில் தனக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் நேரிடையான விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கடிந்து கொண்ட விதம் விவசாயிகளின் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்