நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள பத்து தல படம் பார்க்க வித்தியாசமாக நடிகர் கூல் சுரேஷ் தியேட்டருக்கு வந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “பத்து தல”. இந்த படத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், நடிகை பிரியா பவானி ஷங்கர், இயக்குநர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. முன்னதாக பத்து தல படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.


இந்த படம் கன்னடப்படமான மஃப்டி படத்தின் ரீமேக் ஆகும். அதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்த கேரக்டரில் தான் சிம்பு நடித்துள்ளார். கடந்த மார்ச் 18 ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதனைத் தொடர்ந்து படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. பத்து தல படத்துக்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், சென்னையில் முதல் காட்சி 8 மணிக்கும், பிற ஊர்களில் 7 மணிக்கும் படம் திரையிடப்பட்டது.






இதனால் நள்ளிரவு முதலே தியேட்டர்கள் களைக்கட்டியது. கட் அவுட்கள், தோரணங்கள், வாண வேடிக்கைகள், மேள தாளங்கள் என ரசிகர்கள் மாஸ் காட்டினர். குறிப்பாக சிம்புவின் பாடல்களுக்கு  தியேட்டர் வளாகத்தில் டான்ஸ் ஆடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில் நடிகரும், சிம்புவின் தீவிர ரசிகருமான கூல் சுரேஷ் படம் பார்க்க பொம்மை ஹெலிகாப்டருடன் தியேட்டருக்கு வந்தார். 


முன்னதாக ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசமான கெட்டப்பில் வரும் கூல் சுரேஷ் இந்த படத்துக்கு ஹெலிகாப்டரில் வரப்போவதாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இதனால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், பொம்மை ஹெலிகாப்டருடன் அவர் வந்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதன் வீடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது.