மயிலாடுதுறை அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி பஜார் நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த 90 கிட்ஸ் மிட்டாய்கள் கடை மாணவ, மாணவிகளை வெகுவாக கவர்ந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மன்னன்பந்தலில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில், ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் கல்லூரி பஜார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்திருந்தார். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமன்றி தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் கலந்துகொண்டு தங்கள் தயாரிப்புகளை காட்சிபடுத்திருந்தனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மகளிர் சுய உதவி குழு பெண்கள் அவர்களின் கைவண்ணத்தில் உருவான கைவினைப் பொருட்கள், ஆபரணங்கள் உடைகள் உள்ளிட்ட பொருட்களின் கண்காட்சி மற்றும் 30 -க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு விற்பனையும் நடைபெற்றது. கைவினைப் பொருட்களைக் கொண்டு தயார் செய்யப்பட்ட தோடு, ஜிமிக்கி, கழுத்து மாலைகள், வளையல்கள் கல்லூரி மாணவிகளை வெகுவாக ஈர்த்தது.
இந்த நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருந்த 90-ஸ் கிட்ஸ் மிட்டாய் கடை ஆண்கள், பெண்கள் என அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. 1990 கால கட்டங்களில் தமிழகத்தில் பெட்டிக்கடைகள் மிகவும் பிரபலம். இப்படிப்பட்ட கடைகளில் தற்போது 90ஸ் கிட்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படும், 1990 காலகட்டங்களில் பிறந்தவர்கள் ஈக்களாக மொய்த்துக் கொண்டிருப்பார்கள். 1990களில் பள்ளிக்கு சென்று படித்த குழந்தைகளின் தின்பண்டமே இந்த மிட்டாய்கள் தான். காலம் மாற, மாற அந்த மிட்டாய்களும் மாறிவிட்டது. ஆனாலும், 90-ஸ் கிட்ஸ் பலரும் சின்ன வயதில் சாப்பிட்ட மிட்டாய்களை மீண்டும் சுவைக்க ஏங்குகின்றனர். அந்த ஏக்கத்தை போக்க சிலர் இன்னும் அந்த வகையான மிட்டாய்களை விற்பனை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த கல்லூரி பஜார் நிகழ்ச்சியில் 90ஸ் மிட்டாய் கடை அமைக்கப்பட்டிருந்தது, அதில் ஊதா கலரு ஜவ்மிட்டாய், புளி, கருப்பட்டி சேர்க்கப்பட்ட குச்சி மிட்டாய், கமர்கட்டு, கல்கோனா மிட்டாய், சூட மிட்டாய், இலந்தை அடை, இலந்தை ஜூஸ், மம்மி டாடி மிட்டாய், சிகரெட் மிட்டாய், பேப்பர் அப்பம், ஆரஞ்சு மிட்டாய் உள்ளிட்ட மிட்டாய் வகைகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. 90ஸ் கிட்ஸ்கள், பள்ளி வாசலில் இடைவேளையில் வாங்கி தின்ற திண்பண்டங்கள் மலரும் நினைவுகளை ஏற்படுத்துவதாக மாணவ மாணவிகள் தெரிவித்து சென்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்