அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்(Udhayanidhi Stalin) சட்டசபையில் இன்று பேசியதாவது, “ தமிழ்நாட்டின் அரசியல் அரங்கு நீண்ட நெடிய வரலாறு கொண்டது. சேர, சோழ, பாண்டியர் காலத்தில் இருந்து தமிழர்கள்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்களே தவிர, வடக்கே இருந்து வந்து இங்கு யாரும் வென்ற வரலாறு கிடையாது. தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அப்படி ஒரு சிறப்பு உண்டு.


வெல்ல முடியுமா?


இப்போதும் கூட யார்? யாரோ? தமிழ்நாட்டை வெல்லலாம் என்று நினைக்கிறார்கள். அதற்கான முயற்சிகளும் செய்கிறார்கள். அவர்கள் விளையாட்டு இந்தியாவின் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் எடுபடலாம். ஆனால், தமிழ்நாட்டில் எடுபடாது. அதற்கான காரணம் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள தி.மு.க. என்ற அணியும், அந்த அணியை வழிநடத்திக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் எனும் கேப்டன்தான்.


அமைச்சராக பொறுப்பேற்று 4 மாதங்கள்தான் ஆகிறது. அமைச்சராக பொறுப்பேற்றதும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நடத்த 50 கோடி ஒதுக்கீடு செய்ததுதான் நான் இட்ட முதல் கையெழுத்து. இந்த போட்டிகள் மிகப்பெரிய அளவில் மக்கள் பங்களிப்புடன் நடந்து வருகிறது. தற்போது பாரம்பரிய போட்டிகளான கபடி, சிலம்பம், இவை தவிர கிரிக்கெட், பேஸ்கட்பால், வாலிபால் போன்ற விளையாட்டுகளுக்கான போட்டிகள் பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் உள்பட 5 பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்படுகிறது.


வீரர்களுக்கான பரிசுத்தொகை:


38 மாவட்டங்களில் நடத்தப்பட்ட போட்டிகளில் 3 லட்சத்து 71 ஆயிரத்து 355 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மாநில அளவிலான போட்டிகள் விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் அதிக பதக்கங்களை பெறும் முதல் 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் கோப்பை வழங்கப்படும். மாநில அளவிலான இந்த போட்டியில் தனிநபர், இரட்டையர் பிரிவில் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சமும், குழு போட்டிகளுக்கு ரூபாய் 9 லட்சமும் பரிசாக வழங்கப்படுகிறது.


தமிழ்நாட்டிற்காக தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்று நலிந்த நிலையில் உள்ள 58 வயதான வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பென்சன் ரூபாய் 6 ஆயிரமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 71  வீரர்கள் பயன்பெறுகின்றனர். நான் அமைச்சராக பொறுப்பேற்ற 4 மாதங்களில் சர்வதேச அளவில் பதக்கங்கள் வென்ற 161 வீரர்கள், வீராங்கனைகளுக்கு ரூ 2 கோடியே 29 லட்சம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டு ஹாக்கி வீரர்கள்:


நம் அரசு அமைந்த பிறகு 2 ஆண்டுகளுக்கு பிறகு 1594 வீரர்களுக்கு ரூபாய் 40 கோடியே 18 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 101 தலைசிறந்த வீரர்களுக்கு 11 கோடி அளவிற்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 81 கிராண்ட்மாஸ்டர்களில் தமிழ்நாட்டில் 28 கிராண்டமாஸ்டர்கள் உள்ளனர். எந்த மாநிலத்திற்கும் இல்லாத பெருமையை தமிழ்நாட்டிற்கு இருப்பதால் 114 கோடி ரூபாய் செலவில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை நடத்தி முதலமைச்சர் முடித்தார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு 2 ஆண்டுகள் ஆகும். ஆனால், நாம் 4 மாதங்களில் செய்து முடித்தோம்.


அரியலூரைச் சேர்ந்த கார்த்தி மற்றும் மாரீஸ்வரன் இந்திய ஹாக்கி அணிக்காக ஆடி ஆசிய கோப்பையில் வெள்ளிப்பதக்கம் வெல்ல உதவினர். முதலமைச்சர் அவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கினார். முதலமைச்சர் அரியலூர் சுற்றுப்பயணத்திற்கு சென்றபோது கார்த்தியின் வீட்டிற்கே சென்று அவரை சந்தித்தார். அவருக்கு வீடு ஒதுக்கி நடவடிக்கை எடுத்தார். இதனால், கார்த்தி இன்று சர்வதேச போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார்."


இவ்வாறு  அவர் பேசினார்.