பொன்னியின் செல்வன் படத்தின் 2 பாகம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் மிக முக்கியமான அப்டேட் ஒன்றை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 


பொன்னியின் செல்வன் - 1


கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியானது. கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி உருவாக்கப்பட்ட இப்படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். இந்த படத்தில்  விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர், ரகுமான், கிஷோர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. 


லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் பணியாற்றியுள்ளார். முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வருகை தந்தனர். படமும் வசூலில் ரூ.500 கோடியை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 


நாவலை படித்தவர்களும் சரி, படிக்காதவர்களும் சரி எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் படம் எடுக்கப்பட்டது பாராட்டைப் பெற்றது. 


பொன்னியில் செல்வன் 2 படம்


இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகம் வரும் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  சென்னை நேரு உள்விளையாட்டரங்கில்  பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.


மேலும் அமைச்சர் துரைமுருகன், நடிகர் சிலம்பரசன், இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விரைவில் இந்த இசை வெளியீட்டு விழா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. மேலும் 2 ஆம் பாகம் ரிலீசுக்கு முன்னால் முதல் பாகத்தை ரீ-ரிலீஸ் செய்யவும் படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 


இந்நிலையில் படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4dx தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4dxதொழில்நுட்பத்தில் நாம் திரையில் காணும் காட்சிகளின் உணர்வுகளை நாம் இருக்கையில் அமர்ந்தபடி உணர முடியும்.  ஏற்கனவே பொன்னியில் செல்வன் படத்தின் முதல் பாகம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகியிருந்தது. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. 


பொன்னியின் செல்வன் - 2  ரிலீஸூக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை படக்குழு மகிழ்விக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.