நடிகர் சூர்யா நடித்து வரும் 42வது படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடிகர் சூர்யாவின் 42வது படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. கிட்டதட்ட 2 ஆண்டுகளாக ரசிகர்களிடையே பரவி வந்த அந்த தகவலும் உண்மையானது. அதாவது சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த ஆகிய படங்கள் மூலம்  தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் இயக்குநராக மாறிய சிவா தான் அந்த படத்தை இயக்கப்போகிறார் என தெரிவிக்கப்பட்டது. 


வரலாற்று பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ஹீரோயினாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி  நடிக்கிறார். யூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு  தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தொடர்ந்து செப்டம்பர் 9 ஆம் தேதி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியிருந்தது. அதில்  3டி தொழில்நுட்பத்தில்  10 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 


இந்த படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு கோவாவில் நடந்து முடிந்த நிலையில் சூர்யா 13 விதமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அப்டேட்டுகளை கேட்டு  சூர்யா ரசிகர்களும் அவ்வப்போது ஹேஸ்டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனிடையே சில தினங்களுக்கு முன்பு ஏப்ரல் 16 ஆம் தேதி சூர்யா 42 படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி  அறிவிக்கப்படும் என ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தெரிவித்திருந்தது. 


இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “புகழ்ச்சிகளுக்கும், இடியின் சத்தங்களுக்கும் நடுவே போர் வீரன் நுழைகிறான்” என்ற கேப்ஷனோடு புது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு மலை உச்சியில் இருந்து இன்னொரு மலை உச்சிக்கு குதிரையில் வீரன் ஒருவன் தாவுவது போல காட்சி இடம் பெற்றுள்ளது.