தஞ்சாவூர்: தமிழக அரசு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கினால் மகாராஷ்டிர அரசு சார்பில் மகாராஷ்டிர மக்களுக்காக மகாராஷ்டிர பவன் கட்டித்தரப்படும் என்று அந்த மாநில அமைச்சர் உதய்சாமந்த் தஞ்சாவூரில் நடந்த விழாவில் தெரிவித்தார்.

Continues below advertisement

தஞ்சை அரண்மனை வளாகத்திலுள்ள சங்கீத மகாலில் தமிழ்நாடு மராட்டா சங்க வெள்ளி விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு தமிழ்நாடு மராட்டா சங்கத் தலைவர் விஸ்வஜித் காடேராவ் தலைமை வகித்தார்.. விழாவை தமிழக உயர்கல்கவித்துறை அமைச்சர் கோவி.செழியன், மகாராஷ்டிர மாநில தொழில் துறை மற்றும் மராத்தி மொழி அமைச்சர் உதய் சாமந்த் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து லோகோவை வெளியிட்டனர்.

பின்னர் அமைச்சர் கோவி.செழியன் பேசுகையில், மராட்டிய மக்கள் வேறு, தஞ்சை வாழ் மக்கள் வேறு அல்ல. பல நூற்றாண்டுகளாகப் பெருமை சேர்க்கும் இந்த அரண்மனையை பல கி.மீ. தொலைவுக்கு அப்பால் நின்று பார்த்து செல்லும் நிலை இருந்தது. தற்போது சாதாரண ஏழை, எளிய பாமரனும் இந்த அரங்கத்தில் அமர்ந்து மகாராஜா விழாவையும், வெள்ளி விழாவையும் கொண்டாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ள மத ஒற்றுமை மிகுந்த மாநிலம் தமிழ்நாடு. இதைக் கட்டிக் காப்பது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றார்.

Continues below advertisement

பின்னர், மகாராஷ்டிர மாநில தொழில் துறை மற்றும் மராத்தி மொழி மந்திரி உதய் சாமந்த் பேசுகையில், தமிழகத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து கொடுத்தால், அங்கு மராட்டிய மக்களுக்காக மகாராஷ்டிர அரசு செலவில் ரூ.5 கோடி செலவில் மகாராஷ்டிர பவன் கட்டித் தரப்படும் என்றார்.

தொடர்ந்து மூன்று பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. விழாவில் மகாராஷ்டிர மாநில எம்.எல்.ஏ. சுகாஷ்பாபர், தமிழ்நாடு மராட்டா சங்கத்துக்கான மகாராஷ்டிர பிரதிநிதி கரண் சம்பாஜி ராவ், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, எம்எல்ஏ., டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, தஞ்சை அரண்மனை இளவரசர்கள் சிவாஜி ராஜா போன்ஸ்லே, பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் மராட்டா சங்கத்தினர் கலந்து கொண்டனர்.