தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பின்னவாசலில் மலைத்தேனி எனப்படும் கதண்டுகள் தாக்கியதில் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், பின்னவாசல் ஊராட்சி கொல்லைக்காடு பகுதியில், அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் தங்கள் குலதெய்வக் கோவிலில் நேற்று மாலை பொங்கல் வைத்துக் கொண்டிருந்தனர். 

அப்போது அடுப்பில் இருந்து வெளியேறிய புகையால் அங்கிருந்த ஆலமரத்தில் கூடு கட்டி இருந்த மலைத்தேனி மற்றும் கதண்டு எனப்படும் விஷ வண்டுகள் வெளியேறி, அங்கு கூடியிருந்தவர்களை தாக்கியது. 

Continues below advertisement

இதில், அதே பகுதியைச் சேர்ந்த செல்வராணி (53), பூங்கோதை (47) தனலட்சுமி (34),அம்பிகா (55), பழனியம்மாள் (52), சிறுவன் தனிஷ் (12), கரிஷ் (8), சஞ்சய் (3) உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். உடன் அவர்கள் அனைவரும் உடனடியாக பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர் சினேகா பிரியதர்ஷினி தலைமையில், செவிலியர்கள் வனிதா, எஸ்தர் ராணி மற்றும் மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் நேற்று இரவு 10 மணிக்கு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, ஒவ்வொருவருக்கும் ஹார்லிக்ஸ் பாட்டில் வழங்கினார். மேலும், மருத்துவரிடம், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். 

அதனைத் தொடர்ந்து பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலர் சீனிவாசனை தொடர்பு கொண்டு, விஷ வண்டுகளை அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விஷவண்டுகளை அழித்தனர்.

"கதண்டுகள்" என்பது குளவிகளை குறிக்கும். இவை விஷத்தன்மை கொண்டவை, கடித்தால் கடுமையான வலி, வீக்கம் மற்றும் சில சமயங்களில் உயிரிழப்பு கூட ஏற்படலாம். குறிப்பாக விஷக்கதண்டுகள் ஒருமுறை கடித்தால் உயிர் போகும் அளவுக்கு ஆபத்தானவை

கதண்டு கடித்தால் உடனடி மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம். மஞ்சள் போன்ற இயற்கை மருத்துவ முறைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. கதண்டு என்ற கொடிய நஞ்சுள்ள வண்டு அதிகளவில் காட்டுப் பகுதியில் காணப்படும். காடுகள் அழிக்கப்பட்டு வருவதால், ஊருக்குள் இருக்கும் பனை மரங்கள், தென்னை மரங்களில் இவை கூடுகட்டி வசித்து வருகிறது. இந்த கொடிய நஞ்சு வண்டு கூட்டமாக வந்து தாக்கும்.

ஒருவரை நான்குக்கும் மேற்பட்ட கதண்டுகள் கடித்தால், உயிர்பிழைப்பது கடினம். தலையில் கடித்தால் நஞ்சு உடனடியாக மூளையைத் தாக்கி, சிறுநீரகத்தை பாதிப்படைய செய்யும் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். மேலும், சிறு குழந்தைகளை இரண்டு வண்டுகள் கடித்தாலே உயிர் இழக்க நேரிடும்.