தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நண்பர்களுடன் ஆற்றில் குளித்த போது தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி தாராசுரம் பேட்டை தெரு பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். இவருடைய மகன் சிவபாலன் (12). இவர் கும்பகோணம் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் மாலை சிவபாலன் தனது நண்பர்களுடன் தாராசுரம் மார்க்கெட் அருகே உள்ள அரலாற்று படித்துறையில் குளிக்க சென்றார்.

அங்கு குளித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக சிவபாலன் தண்ணீரின் வேகத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதனை கண்ட சக நண்பர்கள் கத்தி கூச்சலிட்டனர். உடன் அப்பகுதியில் இருந்தவர்கள் சிவபாலனை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. தொடர்ந்து இதுகுறித்து சிவபாலன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது குறித்து கும்பகோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Continues below advertisement

இதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி தேடினர். நீண்ட நேரமாக தேடியும் சிவபாலனை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் இருள் சூழ்ந்து விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 6 மணி முதல் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் தீயணைப்பு வீரர்கள் தாராசுரம் தொடங்கி சாக்கோட்டை வரை சுமார் 10 கிலோ மீட்டர் அரசலாற்றில் தேடும் பணியை தொடர்ந்தனர்.

தொடர்ந்து மாலை சுமார் 4.30 மணியளவில் கும்பகோணம் மாதுளம்பேட்டை பாரதியார் நகர் பகுதியில் சிவபாலனை சடலமாக மீட்டனர். தொடர்ந்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கா கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆற்றில் இறங்கி யாரும் குளிக்க வேண்டாம். கால்நடைகளை குளிப்பாட்ட வேண்டாம். தண்ணீரின் வேகம் அதிகம் உள்ளது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டாலும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் அதை கண்டு கொள்வதில்லை. இதனால் தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே இதுகுறித்து மக்கள் விழிப்புர்ணவு பெற வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.