தஞ்சாவூர்: குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் இறந்தவர்களில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே ஆதனூர் பகுதியை சேர்ந்த புனாஃப் ரிச்சர்டு ராய் (28) ஒருவர் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவித்ததை அடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.


குவைத்தில் நடந்த பெரும் தீவிபத்து


குவைத்தில் நேற்று அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கு தங்கி இருந்த சுமார் 150க்கும் மேற்பட்டோர் சிக்கினர். இதில் 40 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும், 5 பேர் தமிழர்களும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த தீவிபத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர்


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஆதனுார் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த மனோகரன். விவசாயி. இவரது மனைவி லதா. இத்தம்பதிக்கு புனாஃப் ரிச்சர்ட் ராய் (28), ருஷோ (25) என்ற மகன்கள் உள்ளனர். கடந்த 2019 முதல் குவைத்தில் நாட்டில் மங்காப் என்ற இடத்தில் என்.பி.டி.சி என்ற கட்டுமானப் கம்பெனியில் குவாலிட்டி இன்ஸ்பெக்டராக ருனாஃப் ரிச்சர்ட் ராய் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் தனது வீடு கிரகப்பிரவேசத்திற்காக சொந்த ஊர் திரும்பியவர், ஒன்றரை மாதம் ஊரில் இருந்துள்ளார். ஏப்ரல் மாதத்தில் தான் மீண்டும் குவைத் சென்றுள்ளார். 




தவியாய் தவிக்கும் பெற்றோர்


இந்நிலையில் நேற்று அதிகாலை குவைத்தில் நடந்த தீ விபத்தில் ஒரே கட்டடத்தில் தங்கி இருந்த சுமார் 150க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கினர். இதில் 41க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதே கட்டடத்தில் தங்கி இருந்த புனாஃப் ரிச்சர்ட் ராய் குறித்த விவரங்கள் ஏதும் தெரியவில்லை. அவருடைய செல்போன் எண்ணுக்கு பெற்றோர் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அங்கு தங்கியுள்ள அவருடைய நண்பர்களிடம் கேட்டபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி எம்.எல்.ஏ., அசோக்குமார், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், எம்.பி., அப்துல்லா ஆகியோர் மூலம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். 


அமைச்சர் கூறிய தகவல்


தங்களது மகன் குறித்த எந்த தகவலும் தெரியாததால், அவர்களின் பெற்றோர், உறவினர்கள் கவலையில் இருந்தனர். தங்களின் மகனை பத்திரமாக மீட்டுத்தாருங்கள் என அவரது பெற்றோர் கண்ணீர் மல்க மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், குவைத் தீவிபத்து தொடர்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், தமிழகத்தை சேர்ந்த கருப்பணன், சின்னத்துரை, வீராசாமி மாரியப்பன், முகமது ஷெரீப், புனாஃப் ரிச்சர்டு ராய் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆதனூர் பகுதியில் பெரும் சோகம் நிலவி வருகிறது. தங்களின் மகன் நிலை குறித்து சரியான தகவல் இல்லாத நிலையில் ஆனந்த மனோகரன் மற்றும் லதா ஆகியோர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.




இப்போ திருமணம் வேண்டாம் என்று கூறிய மகன்


இதுகுறித்து புனாஃப் ரிச்சர்டு ராய் பெற்றோர் கூறியதாவது: எனது மகன் கடந்த 2019ம் ஆண்டு முதல் குவைத் நாட்டில் பணி புரிந்து வருகிறார். எங்கள் மகன் குவைத் சென்ற பிறகு தான் எங்கள் குடும்பம் பொருளாதாரத்தில் சற்றே வளர்ச்சி அடைந்தது. வெளிநாட்டில் இருந்து எனது மகன் சம்பாதித்து அனுப்பிய பணத்தில் புது வீடு கட்டியிருக்கிறோம். அதன் கிரகப்பிரவேசம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. அப்போது ஊருக்கு வந்தான். அனைத்து வேலைகளையும் அவன் தான் செய்தான். சொந்தமாக மாடி வீடு கட்டியதில் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி. எங்ககிட்ட பேசும் போது உங்களுக்கு சந்தோஷம் தானேன்னு அடிக்கடி கேட்டான். அப்போ புது வீடு கட்டியாச்சு. உனக்கு பெண் பார்க்குறோம் கல்யாணத்த முடிச்சுட்டு வெளிநாட்டுக்கு செல்லலாம் என்று சொன்னோம். இப்ப திருமணம் வேண்டாம். திரும்பவும் வெளிநாடு போயிட்டு வந்தால் பணப்பிரச்னை இருக்காது என்று சொல்லிவிட்டு குவைத்துக்கு போயிட்டான்.




எப்படியிருக்கான் என்ற விபரம் தெரியவில்லை


அவன் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து என்றதும் பதறி போயிட்டோம். அவன் எப்படியிருக்கான் என எந்த விபரம் தெரியவில்லை. சிலர் சொல்றத கேட்கும் போது எங்களின் உயிர் துடிக்கிறது. அவன் பத்திரமாக இருக்கணும். அவன் கட்டுன வீட்டில் வந்து நல்லபடியா வாழணும் என்று கடவுளை வேண்டிக்கிட்டு இருக்கோம். எங்கள் குடும்பத்திற்கான வாழ்வாதாரமும் அவன்தான். இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். 


இதுகுறித்து இந்திய தூதரகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக பெற்றோருக்கு எவ்வித தகவலும் வரவில்லை. பேராவூரணி வட்டாட்சியர் தெய்வானையிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தங்களுக்கு எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்று தெரிவித்தார்.