தஞ்சாவூர்: ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வெடிகுண்டு இருந்தால் அதை எவ்வாறு பாதுகாப்பாக எடுத்து வெடிக்கச் செய்வது என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை ரயில்வே பாதுகாப்பு படையினர் பயணிகள் முன்னிலையில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் செய்து காட்டினர். 


ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி


ரயில் பயணிகளுக்கு தேவையான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ரயில் பயணம் என்பது அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாக உள்ளது. ரயிலில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடக்கும் பொருட்கள் குறித்து பயணிகள் விழிப்புணர்வு பெற வேண்டும். அதில் வெடிகுண்டு இருந்தால் அதை ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் எவ்வாறு பாதுகாப்பாக அகற்றி வெடிக்கச் செய்வார்கள் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பயணிகள் முன்னிலையில் நடத்தி காட்டப்பட்டது. 




பயிற்சி பெற்ற 32 ரயில்வே பாதுகாப்பு படைவீரர்கள் 


இதற்காக வெடிகுண்டுகளை அகற்றும் பயிற்சி பெற்ற 32 ரயில்வே பாதுகாப்பு படைவீரர்கள் தஞ்சாவூருக்கு வருகை தந்தனர். இவர்கள் வெடிகுண்டு இருந்தால் அதை ஆய்வு செய்வது, பாதுகாப்பாக அகற்றுவது, பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் இல்லாமல் வெளியேற்றுவது, மீட்கப்பட்ட வெடிகுண்டை ரயில் நிலையத்தில் இருந்து அகற்றி பாதுகாப்பாக வெடிக்கச் செய்வது போன்றவற்றில் மிகவும் திறம்பட பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


குப்பைக்கூடையில் வெடிகுண்டு இருப்பதுபோன்ற பாவனை


ரயில்வே பாதுகாப்பு படை திருச்சி மண்டல பயிற்சி மைய சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் வந்த இவர்கள் தஞ்சை ரயில் நிலையத்தில் ஒரு குப்பைக்கூடையில் வெடிகுண்டு இருப்பது போன்ற ஒரு பார்சலை அகற்றுவது குறித்து விரிவாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். முதலில் இதில் வெடிகுண்டு இருப்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து மெட்டல் டிடெக்டரை கொண்டு வெடிகுண்டை ஆய்வு செய்து உறுதிப்படுத்துவது, பின்னர் ஸ்கேனர் வாயிலாக வெடிகுண்டு எந்த ரகம், அதன் தன்மை குறித்து ஆய்வு செய்வது, பின்னர் பாம் பிளாங்கட்டை கொண்டு அந்த வெடிகுண்டை முழுமையாக மூடுவது போன்றவற்றை செய்து காட்டினர். இதை பார்த்த பயணிகள் ரயில்வே பாதுகாப்பு படைவீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கைதட்டி பாராட்டுக்கள் தெரிவித்தனர்.


வெடிகுண்டை அகற்றி வெடிக்க செய்தல்


பின்னர் முழுமையான பாதுகாப்பு கவசம் அணிந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் அந்த வெடிகுண்டை அகற்றி வெளியில் எடுத்துச் சென்று வெடிக்க செய்வது போன்றவற்றையும் செய்துகாட்டினார். இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சை ரயில் நிலையத்தில் நடத்தப்படுவது முதல்முறை. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் செய்திருந்தனர். 




ரயில் பயணிகள் கருத்து


இதுகுறித்து ரயில் பயணிகள் தரப்பில் கூறுகையில், இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நிச்சயம் மக்களுக்கு பயன்படும். ஒயர்களுடன் ஏதேனும் கேட்பாரற்ற பொருட்கள் கிடந்தால் அதை கவனித்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களிடம் தெரிவிக்க வேண்டும். நமக்கு என்ன வந்தது என்று நினைக்கக் கூடாது. இது உண்மையில் மிகவும் பயனுள்ள ஒன்றாக இருந்தது. பாதுகாப்பு படைவீரர்கள் தங்களின் உயிரை துச்சமென நினைத்து வெடிகுண்டை எவ்வாறு கண்டறிந்து அதை அகற்றுகின்றனர் என்பதை கண்கூடாக பார்த்தபோது அவர்களை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது என்றனர்.