தஞ்சாவூர்: தஞ்சாவூரை அடுத்த திருக்கானூர்பட்டியில் அறுவடை செய்யப்பட்ட எள் செடிகளை சாலையில் காய வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோடை மழை காரணமாக மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
எள் அறுவடை பணிகள் தீவிரம்
தஞ்சை மாவட்டத்தில் எள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோடை மழை காரணமாக மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கரும்பு, வாழை, எள் சாகுபடி
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு மேட்டுர் அணையில் தண்ணீரில் குறைந்த அளவில் உள்ளதால் தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். இதுதவிர தஞ்சை மாவட்டத்தில் கரும்பு, வாழை, உளுந்து, வெற்றிலை, எள், மரவள்ளிக்கிழங்கு, நிலக்கடலை, பருத்தி உள்ளிட்டவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
5000 ஏக்கரில் எள் சாகுபடி பணிகள்
இதில் எள், உளுந்து சாகுபடி தை, மாசி மாதங்களில் நடைபெறும். குறிப்பாக சம்பா அறுவடை பணிகள் நடைபெற்ற பகுதிகளில் உளுந்து, எள், மக்காச்சோளம் போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் 5000 ஏக்கர் வரை எள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு சம்பா அறுவடை நடைபெற்ற இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையாக காணப்படும் இடங்களில் எள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தன.
இந்த எள் சாகுபடி பயிர்களின் காலம் 90 நாட்கள் ஆகும். எள் சாகுபடியில் ஏக்கருக்கு 350 கிலோ வரை மகசூல் கிடைக்கும். கடந்த வாரம் ஒரு கிலோ எள் ரூ.160 வரை விலை கிடைத்துள்ளது. செடியின் அடியில் இருந்து மேலாக உள்ள காயில் உள்ள விதைகள் கருப்பாக வந்தால் அறுவடை செய்ய வேண்டும்.
சாலையில் காய வைக்கும் பணிகள் மும்முரம்
தற்போது எள் அறுவடை பணிகள் தஞ்சை மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் சாலை ஓரங்களில் அறுவடை செய்த எள் செடிகளை அம்பாரம் போட்டு வைத்துள்ளனர். சில இடங்களில் வயல்களிலேயே சிறிய, சிறிய அம்பாரமாக போட்டு வைத்துள்ளனர். சில நாட்களுக்கு பிறகு அம்பாரத்தை பிரித்து செடிகளை தட்டி எள்ளை எடுப்பது வழக்கம். இந்த ஆண்டு எள் நன்றாக விளைந்து காய்கள் காய்த்திருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை மழை பெய்ததால் எள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது
இதனால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: இந்த ஆண்டு சாகுபடி செய்த எள் நன்றாக விளைந்திருந்த நிலையில் தொடர்ந்து சில நாட்கள் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக எள் செடிகள் ஒடிந்தும், சில இடங்களில் காய்கள் பச்சை நிறத்தில் இருந்தவாறு வெடித்தும் காணப்படுகின்றன.
அவ்வாறு வெடித்து காணப்படும் எள் செடிகளில் இருந்து எடுக்கப்படும் எள்ளின் தரமும் குறைந்து காணப்படும். இந்த கோடை மழை காரணமாக எள் மகசூல் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.