தஞ்சாவூர்: நம் முன்னோர்களின் அற்புதமான சிற்ப கலைகளை இன்றும் கம்பீரமாக நிலைத்து நின்று பெருமையாக தெரிவிக்கும் கோயில்களும், அதில் உள்ள சிற்பங்களும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும்.


வைணவத் தலங்களில் முக்கியமான இடம் பெறுகிறது


அதுபோல் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலுள்ள வைணவத் தலங்களில் முக்கியமான இடத்தை பெறும் ராமசுவாமி கோயில். கி.பி.1600 முதல் கி.பி.1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது.


இப்போது போல் எவ்வித தொழில்நுட்ப வசதிகளோ, இயந்திரங்களோ இல்லாத போதும் கலைநயமிக்க சிற்பங்களை வடித்து பல நூற்றாண்டுகள் ஆனாலும் அழியாத பெருமையை கொண்டுள்ளது இக்கோயில் சிற்பங்கள். ஸ்ரீராமன் என்னும் விஜயநகரப் பேரரசனுக்கு ரகுநாத நாயக்கர் கும்பகோணத்தில் பட்டாபிஷேகம் செய்து வைத்ததன் நினைவாகவே இக்கோயிலைக் கட்டியதாக தெரிகிறது.




ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக உள்ள கோயில்


வடக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக அமைந்துள்ள இக்கோயில் உள்ளே சென்றால் அலங்கார மண்டபம் உள்ளது. இதில் உள்ள அனைத்து தூண்களிலும் சிற்பங்கள்... சிற்பங்கள் என்று நம்மை மிரள வைக்கும். கலைநுணுக்கமும், அற்புதமாக வடிவமைப்பும் நம் முன்னோர்களின் உயர்ந்த திறமையை உணர்த்துகின்றன. தாராசுரத்தில் ஒவ்வொரு தூணிலும் மிகச்சிறிய அளவில் நுட்பமாக சிற்பங்கள் அமைந்துள்ளன. ஆனால் இந்த மகாமண்டபத்தில் காணப்படும் சிற்பங்கள் ஆளுயர சிற்பங்களாக உள்ளன. 62 தூண்களில் சிற்ப வேலைப்பாடுகள் அசரடிக்கின்றன.


மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள்


இதில் ஒரு தூணின் ஒவ்வொரு பக்கத்திலும் இராமர், சீதை, லட்சுமணர், அனுமார் என்ற நிலையில் அமைத்துள்ளனர். மிகவும் நுணுக்கமாக அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக இந்த கோயிலும் இதில் உள்ள சிற்பங்களும் ஈர்த்து வருகிறது என்றால் மிகையில்லை.


இராமாயண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது


இதுமட்டுமல்ல கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி வரும் திருச்சுற்றில் இராமாயண ஓவியங்கள் மூன்று வரிசையாக வரையப்பட்டுள்ளன. மூன்று சுற்று சுற்றி வந்தால் முழுமையாக இராமாயணத்தைப் படித்துவிடலாம். அந்த வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதுமட்டுமா கோயில் கருவறையில் பட்டாபிஷேகக் கோலத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகனன், அனுமார் உள்ள காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது என்று சுற்றுலாப்பயணிகள் தெரிவிக்கின்றனர்.


கோயிலின் கலையம்சம்


வடக்கு நோக்கிய கருவறையில் மூலவர் ராமரும் சீதையும் பீடத்தில் அமர்ந்திருக்க, பரதன் குடை விரிக்க, இலக்குவன் அஞ்சலி பந்தத்துடன் நிற்க, சத்ருகனன் வெண்சாமரம் வீச, அனுமன் கையில் வீணையையும், சுவடியையும் ஏந்தியிருக்கும் காட்சி நம்மை மயக்கி விடும். இராம பிரான் இடது காலை மடக்கி வலது காலை பூமியில் தொங்கவிட்டு அமர்ந்துள்ள கோலம் மிக அருமையான ஒன்றாகும். இக்கோயிலின் கலையம்சம், இராமாயண ஓவியங்கள் அனைத்து பக்தர்களையும், சுற்றுலாப்பயணிகளையும் வெகுவாக ஈர்த்து வருகின்றனர். கும்பகோணம் வருபவர்கள் இக்கோயில் அழகை ரசித்து செல்கின்றனர்.