தமிழகத்தில் தகுதியுள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி தடைப்படாத வகையில் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாமை நடத்த கோரி கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு அமைதியான வழியில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, பிரதமர், நிதியமைச்சர்களின் உருவ பதாதைகளை ஏந்தியபடி உழவர் குழந்தைகளான மாணவர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.  கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்று பாதிப்பினால், இந்தியாவில் ஏற்பட்டு வரும் பொருளாதார பின்னடைவில் அனைவரும் சிக்கித் தவித்து கொண்டு இருக்கின்றார்கள். கல்லூரிகள்,  பல்கலைக்கழகங்கள் அனைத்தும் செயல்படாத நிலையில் அத்தகைய கல்வி நிலையங்கள் எதுவும் மாணவர்களிடம் இருந்து கல்விக் கடன்களை வசூலிப்பதில் தமது நிலைப்பாடுகளை குறைத்துக் கொள்ளவில்லை. மாணவர்களுக்கான விடுதி கட்டணங்களை மட்டும் தவிர்த்துள்ளனர்.  கொரோனா தொற்று பாதிப்பினால் ஏழைகள் மற்றும் நடுத்தர வகுப்பு பொதுமக்கள் பெருமளவிற்கு வருவாயை இழந்து,

  தங்களது குழந்தைகளுக்கான கல்வி செலவை எதிர்கொள்ள முடியாமல் கடந்த ஆண்டிலிருந்தே அவதிப்பட்டு தடுமாறி வருகின்றனர்.  இது போன்ற மிக நெருக்கடியான நேரங்களில் மத்திய அரசு தாமாக முன்வந்து பெற்றோர்களின் நிதி சுமையை ஓரளவு குறைத்திட முன் வரும்  என எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றோம்.


இந்த ஆண்டு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் கல்விக்கடன் பெற்று இருக்கின்ற மாணவர்களின் கடன்களை,  அதானி, அம்பானி, விஜய் மல்லையா, நீரவ்மோடி உள்ளிட்ட பல பெரு நிறுவனங்களுக்கு,  கடந்த காலங்களில் சுமார் ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கு மேல் தள்ளுபடி சலுகைகள் செய்யப்பட்டது போன்று, ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணங்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என எதிர்பார்த்து ஏமாந்து விட்டோம். கடந்த ஆண்டிலிருந்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏழை மாணவர்களுக்கு முழுமையாக தகுதிகள் இருந்தும் கல்விக்கடன் பெற முடியாமல் தேவையற்ற, பொருத்தமற்ற விதிகளை கூறி அலைகழிக்கப்படுவது வாடிக்கை ஆகிவிட்டது. தகுதியிள்ள மாணவர்கள் அனைவருக்கும்  தடையில்லாமல் உயர்கல்வி கடன் பெற, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் தவறாமல் 2 மாதங்களுக்கு ஒருமுறை கல்விக் கடன் சிறப்பு முகாம்களை தவறாமல் நடத்தி, தகுதியான மாணவர்களுக்கு தேவையான அளவிற்கு கல்வி கடன்களை  வழங்குவதோடு, கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.  இந்த ஆண்டு தவறாமல் மாணவர்கள் கல்விக்கடன் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.


இக்கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தும் வகையில், உழவர் குழந்தைகளான மாணவர்கள், ஏராளமானோர்,  பிரதமர் நரேந்திர மோடி மற்றும்  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், உருவ படங்களை அச்சிட்ட பதாகைகளை கையில் ஏந்தி கவனயீர்ப்பு முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு அமைதியான வழியில், மத்திய,  மாநில அரசுகளை வலியுறுத்தி, உழவர்  மாணவர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இப்போரட்டத்திற்கு மாணவி, செல்விஆதிசிவம் தலைமை வகித்தார். மாணவிகள் சுபா ரவிச்சந்திரன்,  சசிவதனி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன் மற்றும் தலைவர் சின்னதுரை ஆகியோர் விளக்க உரையாற்றினார். இறுதியில் மாணவி திவ்யபாரதி அப்பன் நன்றி உரையாற்றினார்.