டெல்டா பகுதிகளான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பணிகளில் அதிக அளவில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டெல்டா மாவட்டங்களில் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லில் ஈரப்பதம் அதிகரித்து உள்ளதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் இருந்தால் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் அரசு அதிகாரிகள் திருப்பி அனுப்புவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் தொடர்ந்து விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் 17 சதவிகிதத்திலிருந்து 24 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் மத்திய குழுவினர் டெல்டா மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று நெல் மூட்டைகளில் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சோனாம்பேட்டை கிராமத்தில் மத்திய குழுவினர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். தற்போது பெய்து வரும் மழையால் அறுவடை செய்து கொள்முதல் செய்ய தயாராக இருந்த நெல் நனைந்து ஈரப்பதம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவு, நெல்லின் ஈரப்பதம் குறித்து இந்திய உணவு கழக தரக்கட்டுப்பாட்டு தென்மண்டல இயக்குனர் எம்.எஸ்.கான் தலைமையிலான மத்திய குழுவினர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சோனாப்பேட்டை, முன்னவால்கோட்டை கிராமங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேரில் ஆய்வு செய்தனர். நெல் கொள்முதல் செய்யும் அளவு, நெல்லின் ஈரப்பதம், குறித்து ஆய்வு செய்தனர். அப்பொழுது விவசாயிகள் தங்களது பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கிக் கூறினர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து உள்ளது. ஆகவே நெல்லின் ஈரப்பதத்தை அதிகரித்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், மண்டல மேலாளர் ராஜா ராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.