தஞ்சாவூர்: குழந்தை பேறு வேண்டி வருவோரின் வேண்டுதலை நிறைவேற்றுகிறார் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள கூத்தூர் தர்ம சாஸ்தா என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர். தங்களுக்கு வளைகாப்பு விழா முடிந்ததும் நூற்றுக்கணக்கில் வளையல்களை கொண்டு வந்து இங்குள்ள அம்பிகைக்கு சாத்தியும் குழந்தை பிறந்தவுடன், ஆலயமணியை வாங்கி கட்டியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.
நடனபுரி என்று அழைக்கப்பட்ட கூத்தூர்
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ளது கூத்தூர். முன்பு நடனபுரி என்று அழைக்கப்பட்ட இப்பகுதி கூத்தூர் என தற்போது அழைக்கப்படுகிறது. ஊரின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில். பெரிய மதிற்சுவர்களால் சூழப்பெற்று கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்புறம் இரண்டு குதிரை, இரண்டு யானைகள், தர்மசாஸ்தாவின் வாகனங்களாக விளங்குகின்றன.
இடப்புறம் காவல் தெய்வமான கருப்பர் என்று அழைக்கக்கூடிய பதினெட்டாம்படி கருப்பரான சங்கிலி கருப்பர் சன்னதி உள்ளது. வடக்கு நோக்கி மதுரை வீரன் சந்நதி உள்ளது. உள்ளே நுழைந்ததும் வாகன மண்டபம் உள்ளது.
இங்கே யானை, பலிபீடம் அமைந்துள்ளது. ஆலயத்தின் மூல முதல்வரான விநாயகர் அருட்பாலிக்கிறார். அடுத்துள்ள மகா மண்டபத்தில் தர்ம சாஸ்தாவின் உற்சவ மூர்த்தி சிலைகள் உள்ளன. அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் தர்மசாஸ்தா கிழக்கு திசை நோக்கி அருட் பாலிக்கிறார். தர்மசாஸ்தாவின் வலதுகால் தொங்கிய நிலையிலும் இடது கால் மடிந்து குறுக்காக இடது முழங்கால் மேல் இடது கை நீட்டி அருள்பாலிக்கிறார். இவரின் வலதுபுறம் பூர்ணாம்பிகை திருமண கோலத்தில் அமர்ந்துள்ளார். இடதுபுறம் புஷ்கலாம்பிகை அமர்ந்துள்ளார்.
கேரள வணிகர் வியாபாரம்
கேரள வணிகர்கள் வியாபாரம் செய்யும் பொருட்டு அப்போதைய சோழ நாட்டுக்கு வருவது வழக்கம். அதேபோல் ஒரு முறை வந்த கேரள வணிகர்கள் வியாபாரம் செய்ய தங்களுடன் விலையுயர்ந்த பொருட்களை ஏற்றிக்கொண்டு மாட்டு வண்டிகளில் வந்தனர். தங்களின் வழிபாட்டு தெய்வமான தர்மசாஸ்தாவின் உற்சவர் சிலைகளையும் கொண்டு வந்தனர். நடனபுரிக்கு (கூத்தூர்) அந்த வணிகர்கள் வந்தபோது மழை வரும் போல் இருந்ததால் வணிகர்கள் தங்கள் பொருட்களுடனும் தர்மசாஸ்தாவுடனும் அருகே இருந்த விநாயகர் ஆலயத்தில் தங்கினர். இரவு வந்தது.
ஆதி சித்தி விநாயகர்
தர்மசாஸ்தா தனது சகோதரரான விநாயகரிடம் தான் இரு மனைவிகளுடன் வந்திருப்பதால் தங்க வசதியான இடம் வேண்டுமென கேட்டார். உடனே விநாயகரும் தன் இடத்தை சாஸ்தாவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு தள்ளி சென்று அமர்ந்தார். தள்ளிச்சென்று அமர்ந்த அந்த விநாயகர் ஆதி சித்தி விநாயகர் என்று இன்றும் இந்த ஆலயத்தில் போற்றப்படுகிறார்.
மழைவிட்டதும் வணிகர்கள் புறப்பட்டனர். அவர்கள் தங்களுடன் கொண்டு வந்த பொருட்களை எடுத்து சென்றனர். ஆனால் தர்மசாஸ்தாவின் சிலையை மறந்து சென்று விட்டனர். தஞ்சை வந்த வியாபாரிகள் தாங்கள் கொண்டு வந்த மிளகு. ஏலக்காய் போன்ற மூட்டைகளை வியாபாரம் செய்ய பிரித்த போது அதிர்ச்சியடைந்தனர். அந்த மூட்டைகள் அனைத்தும் உப்பு மூட்டைகளாக மாறி இருந்தன. அப்போதுதான் அவர்களுக்கு தாங்கள் கொண்டு வந்த தர்ம சாஸ்தாவின் சிலையை நடனபுரியில் விட்டுவிட்டு வந்ததும் ஞாபகத்திற்கு வந்தது. இதனால் தான் இந்த நிலை ஏற்பட்டது என உணர்ந்த வணிகர்கள் உடனே நடனபுரி வந்தனர். தர்ம சாஸ்தாவை எடுக்க முயன்றனர். ஆனால் அது முடியாத காரியமாக இருந்தது.
திருவிளையாடல்... அஞ்ச வேண்டாம்
அப்போது தர்ம சாஸ்தா அசரீரியாக ‘‘இது என்னுடைய திருவிளையாடல், அஞ்ச வேண்டாம். உங்க பொருட்கள் மறுபடியும் அதே நிலையை அடைந்திருக்கும். நான் இங்கே இருக்க விரும்புகிறேன். இனி, வணிகம் செய்யும் பொருட்டு நீங்கள் இவ்விடம் வரும் போது என்னை தரிசித்து செல்லுங்கள். நான் இங்கேய நிலை கொண்டதை உங்களுக்கு தெரிவிக்கும் விதமாகவே நான் திருவிளையாடல் நடத்தினேன் என்று தெரிவித்தார்.
குழந்தை வேண்டி பிரார்த்தனை
அது முதல் தர்மசாஸ்தா இவ்விடம் அருட்பாலிக்கிறார். இத்தலத்தில் குழந்தை பேறு வேண்டி பிரார்த்தனை செய்யும் பெண்களுக்கு அந்தப்பேறு நிச்சயம் கிடைக்கிறது என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. அவர்கள் தங்களுக்கு வளைகாப்பு விழா முடிந்ததும் நூற்றுக்கணக்கில் வளையல்களை கொண்டு வந்து இங்குள்ள அம்பிகைக்கு சாத்தியும் குழந்தை பிறந்தவுடன், ஆலயமணியை வாங்கி கட்டியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.
தர்மசாஸ்தா பூர்ணாம்பிகை, புஷ்கலாம்பிகையுடன் அருள் பாலிக்கும் இக்கோயில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள கூத்தூரில் அமைந்துள்ளது.