ஓவியக் கலைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது தஞ்சாவூர் ஓவியம். இந்த ஓவியங்களின் வண்ணம் தீட்டும் முறையும், பொன்னிழைகளை ஓவியத்தில் முப்பரிமாண தோற்றம் வரும்படி செய்தலும் இதன் தனித்தன்மை.


தஞ்சாவூர் ஓவியங்கள் 16, 17, 18ம் நூற்றாண்டுகளில் தஞ்சாவூரை ஆண்ட நாயக்கர், மராட்டிய மன்னர்களின் ஆதரவுடன் வளர்ச்சியடைந்தது. தாவரப் பொருள்களிலிருந்து எடுக்கப்படும் சாயத்தையே இந்த ஓவியங்களுக்குப் பயன்படுத்தினர். இன்றும்  கலை ஆர்வமிக்கவர்களின் இல்லங்களை அலங்கரிக்கும் தஞ்சாவூர் ஓவியங்கள், நாம் வசிக்கும் வீட்டுக்கு தனி அந்தஸ்தை ஏற்படுத்தித் தருகிறது என்றால் மிகையில்லை.


இரண்டாவது துளஜா, அமரசிம்மன், சிவாஜி போன்ஸ்லே ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் தஞ்சாவூர் பாணி ஓவியக் கலைஞர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். தஞ்சாவூர் பாணி ஓவியங்கள் என அழைக்கப்படும் ஓவிய பாணி மராட்டிய மன்னர் பிரதாபசிம்மன் (1739 - 1763) காலத்தில் முழு உருவம் பெற்றது என வரலாற்று ஆய்வர்கள் தெரிவிக்கின்றனர்.


முன்பெல்லாம் ‘வெண்ணை உண்ணும் கிருஷ்ணன் , ஆலிலை மேல் குழந்தை கிருஷ்ணன்’, ‘இராமர் பட்டாபிசேகம்’, ‘தேவியர் உருவங்கள்’ போன்ற ஓவியங்கள் திரும்பத் திரும்ப படைக்கப்பட்டன. ஆனால் இப்போது பல்வேறு கடவுளர் உருவங்கள் உருவாக்கப்படுகின்றன. முன்பு பெரிய அளவில் மட்டுமே வரைவார்கள். இப்போது மிகச் சிறிய அளவிலும் தஞ்சாவூர் ஓவியங்கள் செய்யப்படுகின்றன.


இந்த வகை ஓவியங்கள் வெகு நேர்த்தியாக செதுக்கப்பட்ட மரத்தில் வேலைப்பாடுகள் கொண்ட மரச் சட்டத்தின் நடுவில் அமைந்திருக்கும். இந்த சட்டமும்கூட ஓவியத்தின் ஒரு பகுதிதான்.  அந்த அளவுக்கு கவனத்துடனும், கலை நேர்த்தியுடனும் சட்டங்களை உருவாக்குகின்றனர்.


இந்த ஓவியங்களில் முக்கியமாக சிவப்பு, மஞ்சள், நீலம், கருப்பு, வெள்ளை நிறங்களையே பயன்படுத்தினர். சீமை சுண்ணாம்பையும், கோந்தையும் கொண்டு முப்பரிமாணத் தோற்றத்தில் ஆடை அணிகலன்களை உருவாக்குகின்றனர். பிறகு கண்ணாடி கற்களைப் பொருத்தி பொன் வண்ணக் கலவையை அதில் பூசுகின்றனர்.


மரப்பலகைகள், கண்ணாடிகள் என இருமுறைகளில் இவ்வகை ஓவியங்கள் வரையப்படுகின்றன. வரையப்படும் உருவங்கள் உருவ அளவில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும். கடவுளின் உருவம்  பெரிய அளவில் கித்தானின் (கேன்வாஸ்) பெரும் பகுதியை நிறைத்திருக்கும்.  மற்ற உருவங்கள் ஓவியத்தின்  கீழ்ப்பகுதியில் வரிசையிலோ,  அல்லது ஒழுங்குடன் கூடிய குழுவாகவோ அமைந்திருக்கும். இந்த உருவங்கள் பருத்த, முழு நிறைவான தோற்றமுடையதாக இருக்கும். அவற்றில் முரட்டுத்தனம் தவிர்க்கப்பட்டு நளினம் கூடியதாக காணப்படும்.


இந்த ஓவியங்களின் பின்புல வண்ணம் கரும்பச்சை, அடர் நீலம், ஒளிர்சிவப்பு ஆகிய வண்ணங்களில் இருக்கும். நீலம், மஞ்சள், பச்சை அல்லது வெள்ளை வண்ணங்களில் மைய உருவங்கள் தீட்டப்படும். வண்ணங்கள் திடமான கலவையாகத் தீட்டப்படும். பெரும்பாலும் மா  அல்லது பலா பலகைகளில் தான் வரையப்படுகின்றன. அரசர் காலத்தில் அரண்மனையை அலங்கரித்த தஞ்சாவூர் ஓவியங்கள் இன்று உலகம் முழுவதும் கோலோச்சுகிறது.