காப்பீட்டு தொகை வரும் முன்பே பணத்தை வாங்கி கொண்டு காப்பீடு தொகை வந்தவுடன் பணத்தை கொடுக்க மறுக்கும் தனியார் மருத்துவமனை. கையில் கட்டுடன் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் புகார் கொடுத்த பெண். 


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சோத்தக்குடியை சேர்ந்தவர் குமரகுரு இவரது மனைவி கஸ்தூரி. குமரகுரு அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் குமரகுருவுக்கு தினசரி அவரது மனைவி கஸ்தூரி தனது வீட்டில் இருந்து சன்னாநல்லூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று மதிய சாப்பாடு கொடுத்து வருவார். இந்தநிலையில் கடந்த 21ம் தேதி மதிய சாப்பாடு கொடுத்து விட்டு வந்து கொண்டிருந்த போது பின்புறம் வந்த இருசக்கர வாகனம் அவரது பைக் மீது மோதியதில் விபத்துக்குள்ளாகி அவரது வலது கை முறிந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 23ம் தேதியன்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதாக கூறிவிட்டு அங்கிருந்து திருவாரூரில் உள்ள டி.எம்.சி தனியார் மருத்துவமனையில் கஸ்தூரி அனுமதிக்கப்பட்டார். அரசு ஊழியருக்கான மருத்துவ காப்பீடு உள்ளதால் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு தனியார் மருத்துவமனையிடம் விண்ணப்பித்தார். 




காப்பீடுத் தொகை வருவதற்கு ஓரிரு நாட்கள் ஆகும் என்பதால், மருத்துவமனை நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி முன் தொகையாக  45 ஆயிரம் ரூபாய்  செலுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து அறை வாடகை மருந்து மாத்திரை என 20,000 ரூபாய் கட்டியுள்ளனர். இதில் 20,000 ரூபாய்க்கு மட்டும் மருத்துவமனை தரப்பில் பில் கொடுத்ததாக கூறப்படுகிறது. மூன்று நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 26ம் தேதி இரவு 8 மணிக்கு ரூ.67,140 காப்பீடு நிறுவனத்தில் இருந்து டி.எம்சி மருத்துவமனைக்கு செலவுத் தொகையாக வரவு வைக்கப்பட்டுள்ளது. தாங்கள் ஏற்கனவே பணம் கட்டிய நிலையில் காப்பீட்டு தொகையை தங்களுக்கு தர வேண்டும் என கேட்டதற்கு காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து பணம் வரவில்லை எனக் கூறி அலைக்கழித்துள்ளனர். வேண்டுமென்றால் 18,000 ரூபாயை வாங்கி கொண்டு பிரச்சனை செய்யாமல் சென்று விடுமாறு பேரம் பேசியதாக குமரக்குரு குற்றம் சாட்டுகிறார். 


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நேரடி விசாரணை நடத்தி உரிய தொகையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என விபத்துக்குள்ளான கஸ்தூரி தனது கணவருடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து மருத்துவ காப்பீட்டு துறை அதிகாரிகளிடம் கேட்ட பொழுது, அரசு ஊழியர்களுக்கு அரசின் சார்பில் அவர்களின் ஊதியத்திலிருந்து மருத்துவ காப்பீட்டுக்கு என பணம் பிடித்தம் செய்யப்பட்டு அவர்களுடைய குடும்பத்தில் யாரேனும் உடல் நலம் பாதிக்கப்பட்டால் அந்த காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் எந்தெந்த மருத்துவமனைகளுக்கு அதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது அந்த மருத்துவமனையில் மருத்துவ காப்பீடு சிகிச்சை பெற்றால் அதற்குரிய பணத்தை பெறக்கூடாது அப்படி பெற்றால் அது தவறு. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலச்சந்திரனிடம் கேட்ட பொழுது, பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் மனுவாக கொடுத்துள்ளனர். ஆகையால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஊழியர்களிடம் இதுகுறித்து விசாரணை செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மருத்துவமனை சார்பில் தவறு செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.