100 நாள் வேலையின்போது கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்:


திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த மாளந்தூர் கிராமத்தில் உள்ள,  காட்டுப்பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது குளம் வெட்டும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டபோது,  கடப்பாரையில் ஏதோ ஒரு பொருள் தட்டுப்பட்டுள்ளது. உடனடியாக அந்த குழியை ஆழமாக தோண்டியபோது துருப்பிடித்த நிலையில் இரும்பு குண்டு ஒன்று இருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குண்டு வெடித்து விடுமோ? என்ற அச்சத்தில் அவர்கள் அங்கு இருந்து அலறி அடித்துக்கொண்டு சிதறி ஓடியுள்ளனர்.


ஆங்கிலேயர் காலத்து ராக்கெட் லாஞ்சர்:


இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் காவல்துறையினர் கைப்பற்றி,  சோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அது ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்திய ராக்கெட் லாஞ்சர் குண்டு எனவும், மாளந்தூர் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் காவலர்கள் பயிற்சி செய்யும் போது குண்டு புதைந்திருக்கலாம் என்றும்  காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெரியபாளையத்தில் ராக்கெட் லாஞ்சர்:


முன்னதாக, திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அரசினர் மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை அருகே உள்ள மைதானத்தில் கடந்த ஏப்ரம் மாதம் சில இளைஞர்கள்  கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஏதோ ஒரு பொருள் அவர்களது கிரிக்கெட் மட்டையில் தட்டுப்பட்டது. இதனால் அந்த இடத்தை அந்த வாலிபர்கள் தோண்டி பார்த்தபோது ¾ அடி நீளம், ¼ அடி அகலம், 2½ கிலோ எடை கொண்ட ராக்கெட் லாஞ்சர் ஒன்றை கண்டெடுத்தனர்.


தகவலறிந்து  ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி, பெரியபாளையம் காவல் ஆய்வாளர் தரணீஸ்வரி, துண்ஞை காவல் ஆய்வாளர் நரசிம்மன் ஆகியோர் கொண்ட காவல் குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில், அந்த ராக்கெட் லாஞ்சரானது  20 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரியவந்தது.இதையடுத்து,  ராக்கெட் லாஞ்சரை காவல்துறையினர்  கைப்பற்றி,  கும்மிடிப்பூண்டியில் உள்ள பழைய ராணுவ தளவாடங்களை அழிக்கும் தொழிற்சாலைக்கு அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.