கர்நாடக மாநிலத்தில் உருவாகி வரும் காவிரி ஆற்றில் ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 177 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும் என காவிரி நடுவர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை தவணை முறையில் தண்ணீர் திறப்பது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு முழுமையாக தண்ணீரை திறப்பதில்லை. அதே நேரத்தில் அணைகளில் இருந்து உபரி நீரை திறந்து விட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி திறக்கப்பட்டு வருவதாக கணக்கு காட்டப்பட்டு வருகிறது.

 



 

இந்நிலையில் நடப்பாண்டில் ஜூன் மாதத்தில் திறக்க வேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீரில் 7.6 டிஎம்சியும், ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சியில், 22.64 டிஎம்சியும், ஆகஸ்ட் மாதத்தில் 45.95 டிஎம்சியில், 22.6 டிஎம்சி திறக்கப்பட்டுள்ளது. ஆனால் செப்டம்பர் மாதத்தில் கடந்த 1ம் தேதி முதல் 8ஆம் தேதி வரை 9 டிஎம்சியில்,  11 டிஎம்சியாக அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 96.18 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். ஆனால் தற்போது வரை 69.8 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மாதத்தில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரில் 26.3 டிஎம்சி தண்ணீர் திறக்காமல், கர்நாடக அரசு நிலுவையில் வைத்துள்ளது.




 

மேலும் மேட்டூர் அணையில் 38 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தற்போது வரை தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கர்நாடக அணைகளான, கிருஷ்ணராஜசாகர் அணையில் 77 சதவீத நீரும், கபினி அணையில் 90 சதவீதமும், ஹேரங்கி அணையில் 96 சதவீதமும், ஹேமாவதி அணையில் 83 சதவீதமும், தண்ணீர் இருப்பு உள்ளது. ஆனால் கர்நாடக அரசு நினைத்தால், தமிழகத்திற்கு காவிரி நடுவர் மன்றம் அறிவுறுத்தல் படி வழங்க வேண்டிய தண்ணீரை திறந்து விடலாம். ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என்ற எண்ணத்தில் கர்நாடக அரசு இருந்து வருகிறது.

 

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் 76 அடி நீர்மட்டம் இருந்து வருகிறது. மேலும் நீர்மட்டம் 6அடி குறைந்தால், பாசனத்திற்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்படும்.  மேட்டூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு நேற்று கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டுமே, டெல்டா மாவட்டங்களுக்கு விவசாய பாசனத்திற்கு தண்ணீர் வழங்க முடியும். எனவே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி செப்டம்பர் மாதம் வரை திறக்க வேண்டிய 96.18 டிஎம்சி தண்ணீரில், மீதமுள்ள 26.3 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடக அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.