மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோயிலில் காவல்துறை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கடந்த 29 ம் தேதி சாமி தரிசனம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பழமைவாய்ந்த சட்டநாதர் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் பணிக்காக குழி தோண்டிய போது ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டது. அதனை தற்போது அரசு கட்டுபாட்டில் கோயில் உள்ளே தனி அறை அமைத்து அதில் வைத்து பூட்டி சீல் வைத்து காவல்துறை பாதுகாப்பில் அரசு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதனை அரசு கருவூலத்திற்கு எடுத்து செல்ல கூடாது, அது கோயிலுக்கு தான் சொந்தமானது, அதனை அரசு எடுக்க முயன்றால் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் ஒன்று திரண்டு அரசுக்கு எதிராக போராட வேண்டும் என ஆவேசமாக பேசினார்.




 


தொடர்ந்து பேசிய பொன்.மாணிக்கவேல், மாவட்ட ஆட்சியர் அரசு கணக்கு பிள்ளையாக செயல்படாமல் மக்களுக்காக செயல்பட வேண்டும், சில குசும்பு ஆட்சியரும் இருக்கின்றனர். அவர்களை மக்கள் சும்மா விட கூடாது எதிர்த்து கேள்வி கேளுங்க என்றார்.  இந்த சிலைகளை திருப்பி கோயிலுக்கு கொடுப்பதால் உங்களுக்கு என்ன தேர்தல் ஓட்டு போய்டுமா? திருப்பி கொடுத்தால் ஓட்டு எல்லாம் போய்டாது. தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்து தற்போது படி படியாக செய்வதாக கூறுவது ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றுவதாகவும், இது என்ன டாஸ்மாக்கா? என கேள்வி எழுப்பியதோடு தற்போது தேர்தல் வருவதால் இரண்டு கட்சிகளும் ஏமாற்றி வருவதால் மூன்றாவது கட்சிக்கு வாக்கு அளிங்க என கூறினார்.




நான் கோயிலுக்குள்ள வரவே மாட்டேன். ஆனால், ஆட்சி செய்வேன். அப்படி சொன்னா என்ன அர்த்தம்? தேர்தல் வரும் முன்னே சொல்ல வேண்டும் நான் கோயிலுக்குள்ள வர மாட்டேன் என் ஆளு வரானோ, என் வீட்டு கார அம்மா வருதோ எனக்கு தெரியாதுனு தேர்தலுக்கு முன்னே சொன்னா அது நேர்மை. ஆனால், தேர்தல் முடிந்து இப்படி சொன்னா நான் ஏமாறா மாட்டேன் என தமிழக முதல்வரையும் அவரது குடும்பத்தையும் மறைமுகமாக தாக்கி பேசிய பொன்.மாணிக்கவேல், ஆங்கிலேயர் காலத்தில் ஆட்சியர்கள் மக்களை கண்டு பயந்தனர். ஆனால் தற்போது சுதந்திரம் அடைந்த பின்னர் உள்ள ஆட்சியர்களை கண்டு நாம் பயப்பட வேண்டியாதாக உள்ளதாகவும், எதிர்த்து கேள்வி கேளுங்க என தெரிவித்தார். 




இந்துக்கள் அனைவரும் சொரணை இல்லாதவர்களாக பூமிக்கு அடியில் கிடைத்த திருமேனிகள் அனைத்தும் தஞ்சாவூரில் பூட்டி வைத்துள்ளனர். அதனை இந்துக்களே காசு கொடுத்த வரிசையில் நின்று பார்த்து வருவதாகவும், மற்றவர்கள் காசு கொடுத்து பார்த்தால் தப்பில்ல என அரசுக்கு எதிராக மக்களை தரகுறைவாக பேசினார். பின்னர்  தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பேசிய பொன்.மாணிக்கவேல் உன் தாத்தா பெயர் என்ன? அவரோடு அப்பா பெயர் என அடுத்தடுத்து கேட்டு தெரிந்து கொண்டு மிரட்டல் தொனியில் நீ  இஸ்லாமியர் நீ எல்லாம் இங்கு வர கூடாது, உனக்கு இங்கு வர தகுதி இல்லை வெளியே போ என பேசியது கோயிலுக்கு வந்த பக்தர்களையும், செய்தியாளர்களையும் அதிர்ச்சியையும், கோவத்தையும் ஏற்படுத்தியது. இதனால் செய்தியாளர்கள் பொன்.மாணிக்கவேலுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் சமாதானம் செய்தனர்.




பின்னர் சீர்காழி பத்திரிகையாளர் சங்கம் சார்பில் முன்னாள் ஐஜி.பொன். மாணிக்கவேலுக்கு கண்டனம் தெரிவித்ததையடுத்து அங்கிருந்து பொன்.மாணிக்கவேல் விரைந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார். ஒரு முன்னாள் ஐஜி.பொன்.மாணிக்கவேல் மக்கள், ஆட்சியர், முதல்வர், செய்தியாளர் என அனைவரையும் பாகுபாடு இன்றி தரக்குறைவாக பேசிய நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டும் இன்றி, இவரது பேச்சுக்காக இவர்வ்மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




இந்நிலையில் இதுகுறித்து பாதிக்கப்பட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் சீர்காழி காவல்நிலையத்தில் இஸ்லாமிய மதத்தையும் என்னையும் தரக்குறைவாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாகிய பொன். மாணிக்கவேலை கைது செய்ய கோரி சீர்காழி காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதே போல சீர்காழி தாலுகா பத்திரிகையாளர் சங்கம் சார்பிலும் பத்திரிகையாளரை மத ரீதியாக அவமதிப்பு, தமிழக முதல்வர், நீதிமன்ற சட்டம், மாவட்ட ஆட்சியர், இந்து சமயத்துறை ஆகியவற்றை தரகுறைவாக பேசிய முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய கோரி சீர்காழி காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.