தஞ்சாவூர் பூக்கார தெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி (48), சென்னையில் போக்குவரத்து காவல்துறை பிரிவில் பணியாற்றி வருகிறார்.  இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் ஞானம் நகரில் புதியதாக வீடு கட்டியுள்ளார். இந்த புதிய வீட்டின் புதுமனை புகுவிழா கடந்த 20ஆம் தேதி நடைபெற்றதால், சத்தியமூர்த்தி தனது குடும்பத்துடன் பழைய வீட்டை பூட்டி விட்டு, புதுமனை புகுவிழா  நடைபெறும் வீட்டிற்கு சென்றார். கடந்த 23ஆம் தேதி இரவு 10 மணிக்கு பழைய வீட்டை பூட்டி விட்டு புதியதாக கட்டிய வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாத கண்காணித்த அடையாளம் தெரியாத நபர்கள், நேற்று இரவு வீட்டுக்குள் புகுந்து பீரோவில் வைக்கப்பட்டு இருந்த, சுமார் 15 சவரன் நகை, 5 லட்சம் ரொக்க பணத்தை திருடி சென்றனர். இதையடுத்து நேற்று காலை சத்தியமூர்த்தி வீட்டிற்கு வந்த போது, வீடு மற்றும் பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.



பின்னர் தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார், கைரேகை நிபுணர்கள் கைரேகை சோதனையை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, வீட்டிலிருந்து சிறிது துாரம் சென்று விட்டு அங்கேயே படுத்து கொண்டது. போலீசார் விசாரணையில், 15 சவரன் நகைகள் வீட்டில் இருந்ததாகவும், 5 லட்சம் ரொக்க பணம் 80 சதவீதம் கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் மொய்யாக வந்தது எனவும்  போலீசார் தெரிவித்துள்ளனர்.



அப்பகுதியில் பூச்சந்தை இருப்பதால், நள்ளிரவு முதல் காலை வரை மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில், போலீசாரின் வீட்டில் நகை பணம் திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சையில் கடந்த சில நாட்களாக பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு வீட்டின் கதவினை உடைத்து நகை, பணத்தை திருடி சென்று அதிகரித்து வருகிறது.