திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் அனைத்தும், திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பை கிடங்கில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனை உள்ளது.



 

இந்த அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மட்டுமல்லாமல், அருகிலுள்ள கள்ளிக்குடி, கலப்பால், இடும்பாவனம், இதேபோன்று நாகை மாவட்டம் ஆலங்குடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிகிச்சைக்காக நாள்தோறும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சிகிச்சைக்கு வருபவர்கள் அனைவரும் இந்த குப்பை கிடங்கை கடந்து சென்று தான் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



 

இன்னிலையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு இந்த குப்பை கிடங்கின் மூலம் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதாக நோயாளிகளும் நோயாளிகள் உறவினர்களும் குற்றம் சாட்டுகின்றனர். இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு சில நபர்கள் இந்த குப்பை கிடங்கிற்கு தீ வைப்பதன் காரணத்தினால் இரண்டு நாட்களுக்கு இந்த பகுதி முழுவதும் புகைமூட்டம் ஆகவே காணப்படுகிறது.

 

இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். மேலும் மழைக்காலம் வந்தால் குப்பை கிடங்கில் இருந்து வரும் கழிவுநீரால் அருகிலுள்ள மக்கள் கடுமையான துர்நாற்றத்திற்கு இடையே வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். 



குறிப்பாக திருத்துறைப்பூண்டி பேரூராட்சியாக இருந்த பொழுதில் இருந்து இந்தப் பகுதியில்தான் இந்த குப்பைக் கிடங்கு செயல்பட்டுவருகிறது. அப்பொழுது அந்த இடத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்த நிலையில் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு குப்பைக்கிடங்கு கொண்டு வந்ததாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடமும் நகராட்சி நிர்வாகத்திடமும் அதேபோன்று வரக்கூடிய அமைச்சர்கள் அனைவரிடமும் இந்த குப்பைகளை அகற்றுமாறு பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்பொழுது குப்பை கிடங்கிற்கு அருகிலேயே எரிவாயு தகனமேடை கட்டப்பட்டு அதுவும் செயல்பட்டு வருகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு திருத்துறைப்பூண்டி நகராட்சி குப்பை கிடங்கை வேறொரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் வேண்டுகோளாக உள்ளது.