காவிரி டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டம் நெல் உற்பத்தியில் முதன்மை இடத்தில் உள்ளது. நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் உரிய விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு அரசு மற்றும் தனியார் அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அரவை செய்யப்பட்டு அரிசி மூட்டைகளில் அடைக்கப்படுகிறது.
இந்த அரிசி மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாய விலை கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமாக திருவாரூர் மற்றும் சுந்தரகோட்டை ஆகிய 2 இடங்களில் நவீன அரிசி ஆலை இயங்கி வந்தது. இதில் திருவாரூர் நவீன அரிசி ஆலை நாள் ஒன்றுக்கு 100 மெட்ரிக் டன் அரிசியை கையாளும் உற்பத்தி திறன் கொண்டது. இந்த அரிசி ஆலை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நவீன மயமாக்கப்பட்ட அரிசி ஆலையாக மாற்றப்பட்டு, இயற்கை எரிவாயு மூலம் செயல்படுத்தும் வகையில் புதிதாக கட்டுமான வசதிகளும் செய்யப்பட்டது.
ஆனால் இந்த ஆலை செயல்பாட்டிற்கு வந்த சில மாதங்களிலே மீண்டும் அரவை பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால் திருவாரூர் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தனியார் அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் அரசுக்கு உரிய வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த ஆலையை உடன் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஏபிபி நாடு செய்தி நிறுவனம் சார்பில் செய்தி வெளியிடப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து அரசின் துரித நடவடிக்கையால் கடந்த 5 ஆண்டுகளாக பூட்டி கிடந்த அரிசி ஆலை தற்போது மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதற்கான ஆயத்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று அரவைக்கான நெல் சேமிப்பு தொட்டியில் நெல் கொட்டும் பணியினை நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் தொடங்கி வைத்தார். அதுசமயம் தரக்கட்டுப்பாடு துணை மேலாளர் தியாகராஜன், உதவி பொறியாளர் பால பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர். ஒரு சில நாட்களில் அரவை பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த அரிசி ஆலையில் நூற்றுக்கணக்கான தற்காலிக பணியாளர்கள் ஆலையில் அரவை நிறுத்தப்பட்ட தன் காரணத்தினால், பணியாற்றிவந்த பணியாளர்களும் வேலை இல்லாமல் தவித்து வந்தனர். தற்பொழுது ஆலை திறக்கப்பட்டதன் காரணத்தினால் நூற்றுக்கணக்கான பணியாளர்களுக்கு மீண்டும் ஆலையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.