தஞ்சாவூர்: பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் திருடிய பைக்கை பயன்படுத்தி சிறப்பு எஸ்.ஐ. மனைவியிடம் இருந்து தாலிச்செயினை பறித்து சென்ற தில்லாலங்கடி திருடன் திருச்சி அருகே போலீசில் வசமாக சிக்கி உள்ளான். 


தஞ்சாவூர் கீழவாசல் எஸ்.என்.எம்., நகரை சேர்ந்த முருகானந்தம். இவர் சிறப்பு எஸ்.ஐ., ஆக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அருணா (43), தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியயையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய் மாலை பள்ளி முடிந்து அருணா தனது ஸ்கூட்டியில் வீட்டிற்கு திரும்பி வந்த கொண்டு இருந்தார்.


அப்போது பள்ளி அக்ரஹாரம் பைபாஸ் சாலையில் பின்னால் வேகமாக பைக்கில் ஹெல்மேட் அணிந்து வந்த மர்மநபர்கள் அருணா கழுத்தில் அணிந்து இருந்த தாலிச்செயினை பறித்துள்ளனர். சட்டென்று சுதாரித்த அருணா தாலிச்செயினை இறுக பிடித்துள்ளார். இதில் திருடன் கையில் மூன்று பவுன் மதிப்பு செயின் மட்டும் அறுந்து சென்று விட்டது. அதிர்ச்சி அடைந்த அருணா அந்த பைக்கை பின்தொடர்ந்து விரட்டியுள்ளார். இருப்பினும் அந்த மர்மநபர்கள் பைக்கை வேகமாக ஓட்டி தப்பிச் சென்று விட்டனர். 


இதுகுறித்து அருணா தஞ்சாவூர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதில்  இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 


இதற்கிடையில் நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் வாலிபர் ஒருவர் பைக்கில் சென்றுள்ளார். அந்த பைக்கை பார்த்த மற்றொருவர் திருடு போன தனது நண்பரின் பைக்கை வேறு யாரோ ஓட்டி செல்கிறாரே என்று சந்தேகப்பட்டு விரட்டி சென்று பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து காணக்கிளியநல்லுார் போலீசில் ஒப்படைத்துள்ளார். 


அந்த வாலிபரிடம் காணக்கிளியநல்லூர் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியானது. பிடிப்பட்ட அந்த வாலிபர் பெரம்பலுார் மாவட்டம் பழையூர் பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் நவீன்குமார் (29) என்பதும்,  கடந்த வாரம் திருச்சியை சேர்ந்த ஹரிஹரசுதன் என்பவரின் டூ வீலரை பெரம்பலுார் பகுதியில் திருடியதும் தெரிய வந்தது. மேலும் திருடிய பைக்கை பயன்படுத்தி தஞ்சாவூரில் ஆசிரியை அருணாவிடம் நேற்று முன்தினம் தாலி செயினை பறித்து சென்றதும் நவீன்குமார்தான் என்பதையும் போலீசார் உறுதி செய்தனர். நகை பறிப்பு சம்பவத்தில் தப்பியோடிய நவீன்குமாரின் நண்பரான கோவையை சேர்ந்த விஜய் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


இந்நிலையில், கைது செய்யப்பட்ட நவீன்குமார் மீது அரியலுார், பெரம்பலுார்,திருச்சி,திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில், 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.