தஞ்சாவூர்: ஏன் நடவடிக்கை எடுக்கலை என்று தஞ்சாவூர் சரக டிஐஜி எடுத்த அதிரடி நடவடிக்கையில் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை மினி பேருந்து டிரைவர் கொலை வழக்கில் முதல்நாள் தகராறு குறித்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் ரவிமதியை சஸ்பெண்ட் செய்து டிஐஜி ஜியாவுல் ஹக் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் திரவுபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிவசங்கர் என்பவரின் மகன் சிவா மணிகண்டன் (28). இவர் மினி பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 6ம் தேதி வழக்கமாக பஸ்சிற்கு டீசல் நிரப்ப செல்லும் பங்க் அருகில் சிவா மணிகண்டனுக்கும், அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நபர்கள் கஞ்சா போதையில் இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த தகராறு குறித்து அன்று இரவே அய்யம்பேட்டை போலீசில் சிவா மணிகண்டன் புகார் செய்துள்ளார்.
இந்நிலையில் 7ம் தேதி மாலை 5 மணிக்கு அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சிவா மணிகண்டனை முகமூடி அணிந்த 3 பேர் நடுரோட்டில் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். தகராறு குறித்து போலீசில் புகார் அளித்ததன் காரணமாக சிவா மணிகண்டன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் புகார் அளித்த சமயத்தில் அவர்களை கைது செய்திருந்தால் கொலையை தடுத்து நிறுத்தி இருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் மூன்று பேர் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் கொலைக் உடந்தையாக இருந்த சிறுவன் உள்பட நான்கு பேரை அய்யம்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிவா மணிகண்டன் முதல் நாள் இரவு புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காத அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிமதியை சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் செய்து உத்தரவிட்டுள்ளார்.