தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார்.



தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அரசின் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்படும் மாதா கோவில் தெருவில் வாடிவாசல் அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடந்தன.

இதில் வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை ஒரு அடி உயரத்திற்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டன. இந்த நார்களால் காளைகளும், வீரர்களுக்கும் கீழே விழுந்தாலும் காயம் ஏற்படாமல் இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. காளைகள் பார்வையாளர் பகுதிக்குள் சென்று விடாமல் இருப்பதை தடுக்க சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

மாடு பிடி வீரர்களை களத்துக்குள் அனுப்புவதற்கு தனி பாதை ஏற்படுத்தப்பட்டது. வீரர்கள் காயம் அடைந்தால் உடன் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது.  ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கான விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. இதன்படி ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாட்டுடன் உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரர்கள் இணையத்தில் தங்களை பற்றி பதிவு செய்து கொண்டனர். மேலும் பெரிய மாட்டிற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

ஆன்லைன் டோக்கன் முறைப்படி வரிசையாக மட்டுமே காளைகள் உள்ளே அனுமதிக்கப்பட்டன. மாடுபிடி வீரர்கள் அரசின் சட்டத்திற்கு உட்பட்டு தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். விழாவிற்கு வருபவர்கள், விழாக்குழுவினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று விழாக்குழு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் 542 காளைகள் பதிவு செய்யப்பட்டு மருத்துவர்கள் அவற்றிற்கு உரிய சோதனைகளை மேற்கொண்டனர். மேலும் 401 மாடுபிடி வீரர்கள் தங்களின் பெயரை பதிவு செய்திருந்தனர்.





தொடர்ந்து இன்று காலை 7.15 மணியளவில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடக்கி வைத்தார். திருக்கானூர்பட்டி பங்குதந்தை தேவதாஸ் இக்னேசியர் முன்னிலை வகிக்த்தார். இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதை பிடிக்க இளம் காளையர்கள் போட்டி போட்டனர். சில காளைகள் சுற்றி சுழன்று தங்களை பிடிக்க வந்த வீரர்களை மிரள வைத்தன. வெற்றி பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகளாக எவர்சில்வர் அண்டா, குடம், ப்ரிட்ஜ், வாஷிங் மிஷின், மிக்ஸி, பீரோ போன்றவை வழங்கப்பட்டன

வல்லம் டிஎஸ்பி., நித்யா தலைமையில் 700 போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், விழா கமிட்டியினர், ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.